விஜய் கட்சி மாநாட்டிற்கு இடம் தருவதில் என்ன பிரச்சனை? .. கேட்கிறார் தமிழிசை செளந்தரராஜன்

Meenakshi
Sep 04, 2024,05:48 PM IST

சென்னை: விஜய் கட்சி மாநாட்டிற்கு இடம் தருவதில் என்ன பிரச்சனை? விஜய் கட்சியையும் தடுக்கிறார்கள். அவரது படத்தின் திரை காட்சிகளையும் தடுக்கிறார்கள் என முன்னாள் ஆளுனர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.


கடந்த பிப்ரவரி 2ம் தேதி தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை நடிகர் விஜய் தொடங்கினார். கட்சி தொடங்கியதில்  இருந்து அடுத்தடுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு கட்சியின் வளர்ச்சி நோக்கி பயணித்து வருகிறார். கடந்த மாதம் 22ம் தேதி பனையூரில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் தமிழக வெற்றிக்  கழகத்தின் கொடியை அறிமுகம் செய்து வைத்தார். அன்றே கட்சி தொடர்பான பாடலையும் வெளியிட்டிருந்தார். கட்சி கொடி அறிமுகம் செய்து வைத்த உடனே பல பிரச்சனைகள் அவரைச் சுற்றின.


இது ஒருபுறம் இருக்க, கட்சி மாநாடு நடத்துவதிலும் பல சிக்கல் நிலவுகிறது. முதலில் மதுரையில் கட்சி மாநாடு என்றார்கள், அதன்பின்னர் திருச்சியில் மாநாடு என்றார்கள். இறுதியில் விக்கிரவாண்டியில் கட்சி மாநாடு நடத்த உள்ளதாக அறிவித்து அதற்காக அனுமதி பெற விண்ணப்பித்துள்ளனர். இருப்பினும் இன்னும் அனுமதி கிடைக்கவில்லை.




இந்த நிலையில் முன்னாள் ஆளுனர் தமிழிசை செளந்தரராஜன் இதுகுறித்துக் கூறுகையில், மாநாடு நடத்துவதற்கு இடம் கொடுப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சனை. கொள்கை எல்லாம் அவர் சொல்லட்டும் அப்பறம் அவர் எப்படி நடத்துறாருனு பார்போம். இத பற்றி சொல்வதினால் நான் அவருக்கு ஆதரவாக இருக்கின்றேன் என்று இல்லை. ஒரு புதிய கட்சி தொடங்கிறார் தொடங்கட்டும். 


ஒரு கார் ரேஸ் நடத்துவதற்கு ஒரே நாளில் அனுமதி பெற்று. எவ்வளவு அனுசரித்து  உடனே நடத்த முடிந்தது. ஆனால், ஒரு புதிய கட்சி தொடங்கிய விஜய், ஒரு மாநாடு நடத்துவதற்கு அனுமதி கேட்டால், அதிகாரிகள் விடுமுறையில் சென்றிருக்கிறார்கள் என்று அலைக்கழித்து 21 கேள்விகள் என்று கேட்டு பிரச்சனை செய்கிறீர்கள்.ஒரு கொஸ்டின் பேப்பரை கொடுத்து. அத வச்சு அவரு பரீட்சை எழுதி... புதிதாக ஒருவர் கட்சி தொடங்கி மாநாடு நடத்துவதற்கு ஒரு இடத்தை கொடுப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சனை? அவ்வளவு பயம் ஏன்.


இடத்தை கொடுப்பதில் ஏன் அவ்வளவு பயம். இடத்தை கொடுத்தால் மடத்தை பிடித்துக்கொள்வார் என்றா? விஜய் கட்சியையும் தடுக்கிறார்கள். அவரது படத்தின் திரை காட்சிகளையும் தடுக்கிறார்கள். விஜய் கட்சியின் மீது எங்களுக்கு எந்த அக்கறையும் இல்லை. விஜய்க்கு ஆதரவாகவும் இல்லை. புதிதாக ஒருவர் வருகிறார். வரட்டும். எல்லோரும் களத்தில் இருப்போம் மக்கள் யாருக்கு ஆதரவு தருகிறார்களோ தரட்டும் என்று கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்