அதிகம் வெறுக்கப்படும் அமெரிக்க நகரம்.. கோடி டாலர் கொடுத்தாலும்.. இங்க வசிக்கவே கூடாது சாமி..!
வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள ஒரு ஊரில் வசிக்கவோ, வீடு, கட்டடம், சொத்து வாங்கவோ பலரும் தயங்குகிறார்களாம். அதிகம் வெறுக்கப்படும் நகராக அது உருமாறியுள்ளது. சமீபத்தில் எடுக்கப்பட்ட ரியல் எஸ்டேட் சர்வேயில் இது தெரிய வந்துள்ளது. அது எந்த ஊர் தெரியுமா.. சாட்சாத் அமெரிக்க தலைநகரான வாஷிங்டன் டிசி தாங்க அது!
உலகப் பெரும் வல்லரசு நாடான அமெரிக்காவின் தலைநகரம் என்றால் எப்படி ஒரு கெத்து, கம்பீரம் இருக்க வேண்டும்.. ஆனால் நாளுக்கு நாள் அந்த கெத்தையும், செல்வாக்கையும் வாஷிங்டன் இழந்து வருகிறதாம். கடந்த 3 வருடமாக ரேட்டிங்கில், வாஷிங்டன் நகரம் மீதான மக்களின் வெறுப்பு அதிகரித்துக் கொண்டே வருவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில் கிளவர் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்திய லேட்டஸ்ட் கருத்துக் கணிப்பில் வாஷிங்டன் நகருக்கு எதிராக கிட்டத்தட்ட 33 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனராம். கடந்த ஜூன் மாதம் 1000 பேரிடம் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுத. அதில்தான் இந்த அதிர்ச்சிகரமான கருத்து தெரிய வந்துள்ளது.
வாஷிங்டன் மட்டுமல்லாமல் மொத்தம் 5 அமெரிக்க நகரங்களை மக்கள் வெறுக்கிறார்களாம். அங்கு சொத்து வாங்கவோ, வீடு வாங்கவோ விருப்பமில்லை என்று இவர்கள் கூறியுள்ளனர்.
அதிக அளவில் செலவு பிடிக்கும் நகரமாக வாஷிங்டன் திகழ்வதால், அங்கு வசிக்க விரும்பவில்லை என்று 65 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதாலும் அங்கு வசிக்க பலர் விரும்பவில்லையாம். கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த 2023ம் ஆண்டு 274 கொலைச் சம்பவங்கள் வாஷிங்டனில் நடந்துள்ளன. இது வாஷிங்டன் மீதான பெரும் கறையாக படிந்துள்ளது.
வாஷிங்டனுக்கு அடுத்து நியூயார்க், லாஸ் ஏஞ்செலஸ் மற்றும் சான்பிரான்சிஸ்கோ நகரங்களும் மக்களின் வெறுப்புப் பட்டியலில் இணைந்துள்ளன. அதிக செலவு பிடிக்கும் நகரங்களாக இவை மாறி விட்டதே இதற்குக் காரணமாகும்.
அதேசமயம் நன்கு படித்வதர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் நகரமாக வாஷிங்டன் திகழ்கிறதாம். மேலும் சிறந்த மருத்துவ வசதியும் இங்கு இருப்பதாலும் அதுவும் மக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது. இதனால் தொலை தூரத்திலிருந்து வாஷிங்டனில் வேலை பார்க்க (ஒர்க் பிரம் ஹோம்) பலரும் முன்னுரிமை தருகின்றனராம்.
மிகவும் குறைந்த அளவில் விரும்பப்படும் நகரங்கள் வரிசையில் 7வது இடத்தில் பால்டிமோர் உள்ளது. இங்த நகரில் குற்றச் செயல்கள் அதிகமாகும். அதேபோல பாலியல் பலாத்காரங்கள், தாக்குதல்கள் அதிகம் நடைபெறும் நகரான டெட்ராய்ட் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இவை தவிர பிர்மிங்காம், அலபாமா, பபலோ, நியூயார்க் ஆகியவையும் கூட குறைந்த அளவில் விரும்பப்படும் நகரங்கள் வரிசையில் உள்ளன.
மறுபக்கம் புளோரிடா மாகாணத்தில் உள்ள தம்பா நகரம் அதிகம் விரும்பப்படும் நகரங்கள் வரிசையில் டாப்பில் உள்ளதாம்.. சரி உங்களுக்குப் பிடிச்ச ஊரு எது .. எங்க கிட்ட பகிர்ந்துக்கங்களேன்!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்