ஒடிசாவின் "சிவப்பு எறும்பு சட்னி".. புவிசார் குறியீடு.. அதுல அப்படி என்னப்பா ஸ்பெஷலா இருக்கு!
டெல்லி: ஒடிஷாவில் வெகு பிரபலமான, பழங்குடியினர் சாப்பிடும் சிவப்பு எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. அப்படி என்ன தான் இந்த சட்னியில் இருக்குனு தெரியுமா? நோய் எதிர்ப்பு சக்தியை இந்த சட்னி அதிகரிக்கிறதாம்.
சிவப்பு எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு என்ற செய்தியை கேட்டவுடன் என்னது சிவப்பு எறும்பு சட்டினியா? என்று வியப்பாகத்தான் இருந்தது. சிவப்பு எறும்புன்னாலே நமக்கெல்லாம் பயம் தான் வரும். அந்த எறும்பு கடிக்கும், உடம்பு தடிப்பாகி விடும், அவ்வளவு தான் நமக்கு தெரிந்தது. ஆனால், ஒடிசாவில் உள்ள மக்கள் சிவப்பு எறும்புகளைப் பிடித்து சட்னி செய்து சாப்பிட்டு, அதற்கு புவி சார் குறியீடு வேற வாங்கிட்டாங்கப்பா.
அப்படி என்ன தான் இதுல ஸ்பெசல் இருக்குனு நாம தெரிச்சுக்கலாம். ஒடிசாவில் உள்ள மயூர்பஞ்ச் என்ற மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் "கை" என்ற ஒரு வகை எறும்பு உள்ளது. இந்த எறும்பு ஒடிசாவில் மட்டும் இல்லைங்க, சிமிலிபால் காடுகள், ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் மாநில காடுகளில் அதிகம் இருக்கும்.
சிவப்பு நிற ராணி
"கை" எறும்புகள் மூன்று வகைப்படும். "தொழிலாளர்கள், பெரிய தொழிலாளர்கள் மற்றும் ராணிகள்" என்று இதை வகைப்படுத்துகிறார்கள். தொழிலாளர்கள் மற்றும் பெரிய தொழிலாளர்கள் வகை எறும்புகள் பெரும்பாலும் ஆரஞ்சு நிறத்தில் தான் இருக்குமாம். ராணி எறும்புகள் சிவப்பு நிறத்தில் இருக்குமாம். இந்த எறும்புகள் சிறிய பூச்சிகள் மற்றும் பிற முதுகெலும்பில்லாத உயிரினங்களை உண்டு உயிர் வாழ்ந்து வருகிறது.
கை எறும்புகள் தங்கள் புற்றுக்கு அருகே வேறு உயிரினங்கள் வந்தால் வேட்டையாடுமாம், இதன் காரணமாக இந்த எறும்பிலிருந்து கிடைக்கும் ரசாயனம் பூச்சிக்கொல்லிகள் தயாரிப்புக்களுக்கு பயன்படுத்தலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். மலைவாழ் மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும் இந்த உணவின் மருத்துவ குணத்தையும் கருத்தில் ஆராய்ச்சி செய்துள்ளனர்.
இதற்கு புவிசார் குறியீடு வாங்க வேண்டும் என்று நீண்ட காலமாக சொல்லி வந்த நிலையில், ஜனவரி 2 , 2024 அன்று புவிசார் குறியீடு இதற்கு கிடைத்துள்ளது.
சட்னி மட்டுமல்ல துவையலும்
மலை வாழ் பழங்குடியின மக்கள் இந்த எறும்புகளை வைத்து துவையல் செய்து உண்கின்றனர். மேலும் இதை அருகில் உள்ள சந்தைகளிலும் விற்பனை செய்கின்றனர். மருத்துவ குணங்களில் சிறப்பு பெற்றது இந்த எறும்பு துவையல் மற்றும் சட்னி. வழக்கம் போன்ற துவையல்தான்.. அதில் பிரதானமாக இருப்பது இந்த கை எறும்பு, இஞ்சி, பூண்டு, மிளகாய், உப்பு ஆகியவை. இதனை சட்டினியாகவும் செய்து சாப்பிட்டு வருகின்றனர். பலர் எறும்பை பச்சையாகவும் பிடித்து சாப்பிடுகின்றனர்.
கை எறும்பு துவையலில் புரதம், கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம், தாமிரம், அமினோ ஆசிட்டுகள் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் என்று நம்பப்படுகிறது. பழங்குடியினர் காய்ச்சல், ஜலதோஷம், இருமல் போன்றவற்றிலிருந்து விடுபடவும், பசியை அதிகரிக்கவும், பார்வை திறனை அதிகரிக்கவும், மூட்டு வலி, வயிற்று நோய்கள், மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு இந்த எழும்பினால் ஆன சட்னி அல்லது சூப்பு வைத்து சாப்பிடுகின்றனர்.
வாதத்துக்கு ரொம்ப நல்லது
கை எறும்புகளை தூய கடுகு எண்ணெயில் குழைத்து மருத்துவ எண்ணையாகவும் தயாரிக்கின்றனர். 30 நாட்களுக்குப் பிறகு இந்த எண்ணை குழந்தைகளுக்கான எண்ணையாகவும், வாத நோய் மற்றும் பிற தோல் நோய்களை குணப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகின்றனர்.
சாதாரண எறும்புல இவ்வளவு மேட்டர் இருக்கே.. ஆச்சரியம்தான்.. அடுத்தவாட்டி ஒடிஷாவுக்குப் போகும்போது கண்டிப்பா இந்த கை எறும்பு சட்னியை செய்து சாப்பிடுவதோடு, கொஞ்சம் எறும்பையும் முடிஞ்சா அங்க இருந்து பிடிச்சுட்டு வந்து இங்க வளர்க்க முடியுமான்னு பார்க்கணும்!