குழந்தைகளுக்கு எந்த பழங்களை அதிகம் கொடுக்கக் கூடாது?

Meena
Sep 05, 2023,05:25 PM IST
- மீனா

பெற்றோர்கள் அனைவரும் கட்டாயமாக குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருப்பார்கள். குழந்தைகளுக்கு எந்த மாதிரி உணவுகளை கொடுக்க வேண்டும், அதேபோல் எந்த மாதிரி உணவுகளை கொடுக்கக் கூடாது என்று கவனத்துடன் இருப்பார்கள் . குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவுகள் எல்லாம் சத்தானதாக இருக்கிறதா என்று  எப்போதும் அதில் ஒரு கண் வைத்துக் கொண்டே இருப்பார்கள்.

எவ்வாறு சத்தான உணவுகளை தேர்ந்தெடுப்பது என்றும் யோசித்துக் கொண்டு இருப்பார்கள். ஏனென்றால் நாம் குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவு மிகவும் ஊட்டச்சத்து மிகுந்தவையாக இருப்பது நல்லது. அப்போதுதான் அவர்களின் உடல் வளர்ச்சிக்கும், மூளை வளர்ச்சிக்கும் வளர்சிதை  மாற்றத்திற்கும் பெரிதும் உதவியாக இருக்கும். பொதுவாக குழந்தைகள் பிறந்து முதல் ஆறு மாத வரை அவர்களுக்கு திட உணவுகளை நாம் அறிமுகப்படுத்தாமல் இருப்பதே நல்லது. அதன் பிறகு அவர்களுக்கு ஒவ்வொரு உணவாக கொடுத்து நாம் பரிசோதிக்க வேண்டும். அவர்களுக்கு ஒவ்வாமை பிரச்சனை உண்டா இல்லையா என்று. 




அதேபோல் நாம் பழங்களையும் கூட அவர்களுக்கு கொடுக்கும்போது அவற்றை நன்கு ஆவியில் வேகவைத்து மசித்து கொடுக்க வேண்டும். அப்போது அவர்களுக்கு எந்த வித தொந்தரவும் இல்லை என்றால் நாம் இதை ஒரு சீரான இடவெளியில் தொடர்ச்சியாக கொடுக்கலாம். சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு பழங்களை கொடுப்பது எவ்வளவு முக்கியமானது என்று நமக்கு தெரியும். ஏனென்றால் பழங்களில் விட்டமின்ஸ்,  தாதுக்கள், பொட்டாசியம் போன்ற எண்ணற்ற சக்திகள் அடங்கியிருக்கின்றன என்பது நாம் யாவரும் அறிந்ததே. இவ்வாறு பழங்களை சிறுவயது முதல் நம் குழந்தைகளுக்கு கொடுக்கும்போது அவர்கள் உடல் வலிமையோடும் ,புத்தி கூர்மையோடு வளர்வதற்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது.

அதேசமயம், சில பழங்களை குழந்தைகளுக்கு நாம் அதிகமாக கொடுக்காமல் இருப்பது நல்லது.  லெமன், ஆரஞ்சு ,திராட்சை, சாத்துக்குடி போன்ற பழங்களில் விட்டமின் சி அதிகமாக இருக்கும். இது நம் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தான் செய்யும். ஆனாலும் கூட இவையெல்லாம் ஒரு அளவிற்கு தான் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். இதில் அமிலத்தன்மை அதிகமாக இருப்பதினால் அது குழந்தைகளின்  வயிறு சம்பந்தமான பிரச்சனைக்கு ஒரு முக்கிய காரணமாக மாறிவிடும்.


 

காய்ச்சல், சளி ,இருமல் போன்ற உடல்நல குறைவு ஏற்படும்  நேரத்தில்  அவர்களுக்கு ஸ்ட்ராபெர்ரி ,லிச்சி, திராட்சை போன்ற பழங்களை கொடுக்காமல் இருப்பதே நல்லது. ஏனென்றால் ஸ்ட்ராபெரியில் இருமலை  மேலும்  தூண்டிவிடும்  ஹிஸ்டமைன் என்ற வேதிப்பொருள் இருப்பதே காரணம். அது மட்டும் இன்றி திராட்சை, லிச்சி போன்ற பழங்களில் இயற்கையாகவே சர்க்கரை அதிகமாக இருப்பதினால் இது பாக்டீரியாக்களை மேலும் வளர ஊக்குவிக்கிறது. ஆகையால் இந்த மாதிரி பழங்களையும்  குழந்தைகளுக்கு அளவோடு கொடுக்க வேண்டும்.