குவியும் வழக்குகள், அரசியல் தாக்குதல்கள்... குறி வைக்கப்படுகிறாரா அல்லு அர்ஜூன்.. நடப்பது என்ன?

Su.tha Arivalagan
Dec 24, 2024,05:10 PM IST

ஹைதராபாத் : நடிகர் அல்லு அர்ஜூன் விவகாரம் விபத்தில் இருந்து, அரசியல், வீட்டு மீதான தாக்குதல் என தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதற்கிடையில் அல்லு அர்ஜூன் மீது புகார்களும் மற்றொரு புறம் குவிந்து வருகிறது. இதனால் உண்மையில் என்ன நடக்கிறது? என்ன காரணத்திற்காக அல்லு அர்ஜூனை குறி வைக்கிறார்கள் என புரியாமல் மக்கள் குழம்பிப் போயுள்ளனர்.


ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புஷ்பா 2 டிசம்பர் 04ம் தேதி ரிலீசானது. இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சந்தியா தியேட்டருக்கு அதிகாலை ஷோவின் போது நடிகர் அல்லு அர்ஜூன் வந்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார். அவரது 8 வயது மகன் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான். பிறகு அவனும் மூளை சாவு அடைந்ததாக சொல்லப்பட்டது. 


இந்த சம்பவம் தொடர்பாக தியேட்டர் உரிமையாளர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில், இதற்கு நடிகர் அல்லு அர்ஜூனும் காரணம் என அவர் மீதும் வழக்கு தொடரப்பட்டு, அவரும் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அல்லு அர்ஜூனுக்கு டிசம்பர் 13ம் தேதி 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டிருந்த நிலையில், அதே நாளில் அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டதால் டிசம்பர் 14ம் தேதியே வெளியில் வந்தார். 


கைது செய்யப்படுவதற்கு முன்பு, உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் அளிப்பதாக அறிவித்திருந்தார் அல்லு அர்ஜூன். இதற்கிடையில் சந்தியா தியேட்டர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சட்டசபையில் பேசிய தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, அல்லு அர்ஜூனையும் தெலுங்குத் திரையுலகினரையும் மிக கடுமையாக விமர்சித்து பேசினார். அதோடு, போலீசார் அனுமதி மறுத்ததையும் மீறி அல்லு அர்ஜூனா தியேட்டருக்கு வந்ததாகவும், நடிகை ரஷ்மிகா மந்தனாவுடன் ரோட்ஷோ நடத்தி, கூட்ட நெரிசல் அதிகரிக்க காரணமாக இருந்ததாகவும் கூறினார். 



போலீஸ் உயர் அதிகாரி ஒருவரும், கூட்ட நெரிசலில் சிக்கி அந்த பெண் உயிரிழந்த தகவல் சொல்லப்பட்ட பிறகும் அல்லு அர்ஜூன் அதை கண்டு கொள்ளாமல் படம் பார்த்துக் கொண்டிருந்ததாகவும், அங்கிருந்து செல்லும்படி சொல்லியும், அவர் செல்ல மறுத்து விட்டதாகவும் கூறி இருந்தார். இதனால் அவசரமாக செய்தியாளர்களை சந்தித்த அல்லு அர்ஜூன், "போலீசார் தான் என்னை பத்திரமாக தியேட்டருக்கு அழைத்து சென்றனர். கூட்ட நெரிசல் ஏற்பட்டதுமே போலீசார் என்னை அங்கிருந்து வெளியேற்ற வைத்தார்கள். கூட்ட நெரிசலில் அந்த பெண் உயிரிழந்த விஷயமே எனக்கு பிறகு தான் தெரிவிக்கப்பட்டது. அதனால் தான் என்னால் அவர்கள் குடும்பத்தை சந்திக்க முடியவில்லை" என விளக்கம் அளித்தார். 


உயிரிழந்த பெண்ணின் கணவரும், இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். இதற்காக நான் அல்லு அர்ஜூனை குற்றம் சாட்ட விரும்பவில்லை. இந்த வழக்கை நான் திரும்ப பெறுகிறேன் என கூறி இருந்தார். அதற்கு பிறகும் அல்லு அர்ஜூனின் ஜூப்ளி ஹில் வீடு மீது மர்ம நபர்கள் கற்கள், தக்காளிகளை வீசி தாக்குதல் நடத்தி, வீட்டின் வெளியில் வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டி போன்றவற்றை உடைத்துள்ளனர். அந்த சமயத்தில் அல்லு அர்ஜூன் வீட்டில் இல்லாததால் அவரது குழந்தைகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் இளைஞர் காங்கிரஸ் தலைவர் என தெரிய வந்துள்ளது.


அல்லு அர்ஜூன் வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு காங்கிரஸ் கட்சி தான் காரணம். அல்லு அர்ஜூன் காங்கிரஸ் கட்சிக்காக பிரசாரம் செய்ய மறுத்ததால் பழிவாங்கும் நடவடிக்கையாக அவர் குறிவைக்கப்படுகிறார் என பாஜக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆனால் இதனை காங்கிரஸ் மறுத்துள்ளது. அல்லு அர்ஜூன் வீடு தாக்கப்பட்டதற்கு தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியும் கண்டனம் தெரிவித்திருந்தார். 




இது ஒரு புறம் இருக்க, மறுபக்கம் புஷ்பா 2 படத்தில் வரும் ஒரு காட்சியில் போலீசாரையும், சட்டத்தையும் அவமதிக்கும் வகையிலான காட்சி இடம்பெற்றுள்ளதாக கூறி அதில் நடித்த அல்லு அர்ஜூன் மீது காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


நடக்கும் சம்பவங்கள் அனைத்திற்கும் அல்லு அர்ஜூன் தான் காரணம் என காங்கிரஸ் எதற்காக அவரை குற்றம் சாட்டி வருகிறது? உண்மையில் பாஜக சொல்லுவது போல் அல்லு அர்ஜூன் காங்கிரசிற்காக பிரசாரம் செய்ய மறுத்தது தான் காரணமா? இல்லை அதையும் தாண்டி வேறு ஏதாவது பழிவாங்கும் நடவடிக்கையா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சி அல்லு அர்ஜூனை குறிவைத்து தாக்குவதும், பாஜக அவருக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்து வருவதும், காரணங்களை தேடி தேடி அல்லு அர்ஜூனை சுற்றி சட்டசிக்கலான வலைகள் பின்னப்படுவதும் அப்பட்டமாக தெரிகிறது.


சட்டசபையிலேயே மாநில முதல்வர் ஒருவர் ஒரு நடிகரை பற்றி இவ்வளவு ஆவேசமாக பேச வேண்டிய அவசியம் என்ன? கூட்ட நெரிசல் சம்பவத்தை தாண்டியும் தனிப்பட்ட விமர்சனங்கள் எதற்காக செய்யப்படுகிறது? என்பது தான் தற்போது மக்கள் முன் எழுந்துள்ள கேள்வியாக உள்ளது. இந்த விவகாரத்தில் புதைந்து, மறைந்து கிடக்கும் உண்மைகள் எப்போது வெட்ட வெளிச்சமாகும் என்பதை அனைவரும் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.. வெளியாகுமா அல்லது மர்மமாகவே நீடிக்குமா??


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்