பாமக மேடையில் வெடித்த திடீர் வாக்குவாதம்.. டாக்டர் ராமதாஸ் - அன்புமணி மோதலுக்கு இதுதான் காரணமா?

Su.tha Arivalagan
Dec 28, 2024,06:50 PM IST

சென்னை: பாஜகவுடன் கொண்ட கூட்டணியால் தான் பாமக தனது பலத்தை இழந்ததாக டாக்டர் ராமதாஸ் கருதுகிறாராம். ஆனால் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற டாக்டர் அன்புமணி ராமதாஸ் விரும்பவில்லை. இதனால்தான் அவர்கள் இருவருக்கும் இடையே சில காலமாகவே உள்ளுக்குள் மோதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.


டாக்டர் ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் இடையிலான மோதல் திடீரென நடந்ததில்லை என்றும் நீரு பூத்த நெருப்பாக இருந்து வந்த பூசல்தான் தற்போது பகிரங்கமாக வெடித்து விட்டதாகவும் கூறுகிறார்கள். முகுந்தன் நியமனம் மட்டுமே இதற்குக் காரணம் இல்லை என்பது பாமகவுக்கு நெருக்கமானவர்கள் கூறும் விளக்கமாக இருக்கிறது.


தமிழ்நாட்டின் மிக முக்கியமான அரசியல் சக்தியாக ஒரு காலத்தில் திகழ்ந்தது பாட்டாளி மக்கள் கட்சி. இக்கட்சியுடன் கூட்டணி அமைக்க திமுக, அதிமுக இடையே கடும் மோதலே நடக்கும். அந்த அளவுக்கு பாமகவின் செல்வாக்கு அப்போது இருந்தது. பாமகவின் நிறுவனராக மட்டுமல்லாமல் கட்சியை டாக்டர் ராமதாஸ் வழி நடத்திக் கொண்டிருந்த காலகட்டம் அது. வட தமிழகத்தில் உள்ள தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்றால் அதற்கு, வட தமிழகத்தில் செல்வாக்கு மிகுந்த கட்சியாக இருக்கக் கூடிய பாமகவின் உதவி இல்லாமல் தனித்து நின்று எந்த கட்சியும் பிரம்மாண்ட வெற்றியை பெற்று விட முடியாது என்ற நிலை.




ஆனால் தனது வயது முதிர்வின் காரணமாகவும், அன்புமணியை கட்சியில் முன்னிலைபடுத்த வேண்டும் என்பதற்காகவும் டாக்டர் ராமதாஸ் படிப்படியாக தனது செயல்பாடுகளை குறைத்துக் கொண்டு அன்புமணி ராமதாசிற்கு அதிக அதிகாரங்கள் பதவிகளை வழங்கினார். ஆனால் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமகவுக்கு பெரிய அளவிலான வெற்றிகளைப் பெற முடியவில்லை.


டாக்டர் ராமதாஸ் இருந்தபோது பாமக எப்படி ஆக்ரோஷமாக இருந்ததோ, அதே அளவிலான செயல்பாடுகள் அன்புமணி தலைமையில் இல்லை என்பது டாக்டர் ராமதாஸுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்ததாக தெரிகிறது. மேலும் கூட்டணி தொடர்பாக அன்புமணி எடுத்த முடிவுகளிலும் அவருக்குத் திருப்தி இல்லை என்று சொல்கிறார்கள்.


பாமக தலைவராக இருந்து வந்த ஜி.கே.மணியை அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கி அவரை கெளரவத் தலைவராக மாற்றியபோதும் கூட கட்சிக்குள் முனுமுனுப்பு எழுந்ததாக கூறப்பட்டது. அன்புமணி ராமதாஸ் தலைவரான பிறகு பாமக அடுத்தடுத்து பல தோல்விகளை சந்திக்க வேண்டி வந்தது. கட்சியின் ஓட்டு வங்கியும் சரிந்ததால், தங்களைத் தேடி கூட்டணி கட்சிகள் வந்த நிலை மாறி, தாங்கள் வெற்றி பெற பெரிய கட்சிகளின் கூட்டணியை பாமக தேடி போக வேண்டிய நிலை உருவானது.


பாஜக.,கூட்டணியில் தான் இருக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் விரும்புகிறார். ஆனால் அதிமுக., கூட்டணிக்கு சென்றால் தான் தங்களுக்கு பலம் என டாக்டர் ராமதாஸ் நினைக்கிறார். கடந்த லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க ராமதாஸ் தொடர்ந்து வலியுறுத்தினார். ஆனால் பாஜக பக்கம் போக வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தால் அன்புமணி. இவர்கள் இருவர் இடையேயான குழப்பம் காரணமாக தான் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் இணைய போவதாக முடிவு செய்து, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை அனைத்தும் முந்து இறுதி செய்ய போகும் கட்டத்தில் கடைசி நிமிடத்தில் பாஜக கூட்டணிக்கு, பாமக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.


பாஜக கூட்டணிக்கு வந்த பிறகு எதிர்பார்த்த படி பெரிய அளவில் முன்னேற்றம், பலன்கள் எதுவும் கட்சிக்கு ஏற்படாததால் டாக்டர் ராமதாஸ் கடும் அதிருப்தி  அடைந்தார். இந்த நிலையில்தான் வருகிற சட்டசபைத் தேர்தலில்  அதிமுக., கூட்டணிக்கு திரும்ப ராமதாஸ் முடிவு செய்துள்ளதாகவும், இதற்கு அன்புமணி ராமதாஸ் ஒப்புக் கொள்ளாமல் போனதே இந்த மோதலுக்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது. அது மட்டுமல்ல, தற்போது ராமதாசின் பேரனான முகுந்தனுக்கு கட்சியில் மாநில இளைஞரணி தலைவர் பதவி கொடுத்தால் கட்சி மெல்ல மெல்ல முகுந்தனின் பக்கம் சென்று விடும். இதனால் அன்புமணி ராமதாசின் பதவிக்கு சிக்கல் ஏற்பட்டு விடலாம் என்பதாலும் முகுந்தனை கட்சியில் முன்னிலைபடுத்துவதை அன்புமணி ராமதாஸ் விரும்பவில்லை என சொல்லப்படுகிறது.


டாக்டர் ராமதாஸின் குடும்பம்




டாக்டர் ராமதாஸுக்கு மொத்தம் 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். அதில் மூத்தவர் பெயர் காந்திமதி. இவருக்கு சுகந்தன், பிரதிவன், முகுந்தன் என  3 மகன்கள் உள்ளனர். 2வது மகள் கவிதாவுக்கு நிதர்சன், வசீகரன் என இரு மகன்கள் உள்ளனர். கடைசி மகன்தான் அன்புமணி ராமதாஸ். இவருக்கு அங்கமித்ரா, சங்கமித்ரா மற்றும் சம்யுக்தா என 3 மகள்கள் உள்ளனர்.


தனது அக்காள் காந்திமதியின் 2வது மகனான பிரதிவனைத்தான் தனது மூத்த மகள் அங்கமித்ராவுக்குக் கட்டிக் கொடுத்துள்ளார் டாக்டர் அன்புமணி ராமதாஸ்.


தற்போது ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையிலான மோதலால் பாமகவினர் மட்டுமல்லாமல், ராமதாஸ் குடும்பத்தினரும் கூட அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தப் பிரச்சினையைத் தீர்க்க ஜி.கே.மணி தலைமையிலான குழு அன்புமணியைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாக சொல்கிறார்கள். தைலாபுரம் தோட்டத்துக்கு அவரை வரவழைத்து டாக்டர் ராமதாஸுடன் சமரசம் ஏற்படுத்தவும் முயற்சிகள் நடப்பதாக சொல்லப்படுகிறது.


தமிழ்நாட்டில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அரசியல் சூழல்கள் வெகுவாக மாறிப் போய் விட்டன. இந்த நிலையில் பாமகவில் ஏற்பட்டுள்ள இந்த மோதல் உற்று கவனிக்கப்பட வேண்டியதாக உள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்