Exclusive: மொத்த முயற்சியும் போச்சு...: அதிமுக.,வை கைப்பற்ற ஓ.பி.எஸ்.,சின் அடுத்த ‛மூவ்’ என்ன?
Mar 29, 2023,02:04 PM IST
சென்னை: எல்லா முயற்சிகளும் ஓ.பன்னீர் செல்வத்தைக் கைவிட்டுள்ளன.. கடைசி வரை போராடத் தயாராக இருக்கும் அவர் முன்பு உள்ள வழிகள் என்ன... அதைப் பற்றி ஒரு ஆய்வு.
அதிமுக.,வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமையாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி இருந்து வந்தனர். இதற்கிடையே கட்சிக்குள் ஒற்றை தலைமை விவகாரம் திடீரென கிளம்பியது. பொதுவான கருத்தாக இருந்தாலும், இந்த விவகாரத்தை கிளப்பியது முழுவதும் எடப்பாடி பழனிசாமி தரப்பை சேர்ந்தவர்களே ஒற்றை தலைமைக்கு குரல் கொடுத்து வந்தனர். இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுக்க, பன்னீர்செல்வத்துக்கு நெருக்கடி அதிகமானது. இது பன்னீர்செல்வம் - பழனிசாமி இடையேயான மோதலை வெளிக்கொண்டுவந்தது.
பொதுக்குழு
‛பழனிசாமியை அதிமுக.,வின் பொதுச்செயலாளராக நியமிக்க வேண்டும்’ என முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், வேலுமணி, கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் விதையை போட்டனர். அதன் தொடர்ச்சியாக கடந்தாண்டு ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டது. அதில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களைக் கட்சியிலிருந்து நீக்கியும், எடப்பாடி பழனிசாமியை இடைக்காலப் பொதுச்செயலாளராக நியமிக்கும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பன்னீர்செல்வம் தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் பழனிசாமி தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியானதால், அடுத்ததாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது பன்னீர்செல்வம் தரப்பு.
தீர்ப்பு
அதில், பொதுக்குழு செல்லும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து கடந்த மார்ச் 17ம் தேதி, அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியது. வழக்கு விசாரணையில், பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தலாம், ஆனால் முடிவு அறிவிக்க கூடாது என உத்தரவிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களும் முடிந்து நேற்று (மார்ச் 28) இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற வழக்கையும், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்கையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
தீர்ப்பு வெளியான சில நிமிடங்களில் பொதுச்செயலாளர் தேர்தலுக்கான முடிவு அறிவிக்கப்பட்டது. அதில், எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். இந்த தீர்ப்பால் பன்னீர்செல்வம் மற்றும் அவரது தரப்பினர் நிச்சயம் அதிர்ச்சி அடைந்திருப்பார்கள். காரணம், அதிமுக.,வில் இருந்து நீக்கப்பட்ட அவர்கள், கட்சியை கைப்ப���்ற தங்களால் முடிந்த அனைத்து வழிகளிலும் தோல்வியுற்றிருந்தனர்.
முட்டுக்கட்டை
அதிமுக.,வின்நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா எனக் கூறிவந்த நிலையில் பதவியை பதவியை பழனிசாமி கைப்பற்ற நினைக்கிறார், அதனை எப்படியாவது தடுத்து விடலாம் என்று எண்ணியவர்களுக்கு அதிலும் முட்டுக்கட்டை விழுந்தது. இருந்தாலும், தோல்வியை காட்டிக்கொள்ளாமல், அடுத்த முயற்சியாக நேற்றைய தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.எஸ் தரப்பை சேர்ந்த மனோஜ் பாண்டியன் அவசர முறையீடு செய்தார். இந்த வழக்கு உடனடியாக இன்றே விசாரணைக்கு வருகிறது.
ஓ.பி.எஸ் வசம் இருக்கும் வாய்ப்புகள்
* சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் போன்றவற்றில் தொடர்ந்து தன் முயற்சிகளில் தோல்வி அடைந்து வரும் ஓ.பி.எஸ்., இன்றைய அவசர வழக்கு விசாரணையில் தங்கள் தரப்பு நியாயத்தை மிகவும் அழுத்தமாக பதிவிட்டு, பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டதற்கு இடைக்கால தடை வாங்கலாம்.
* இல்லையெனில், இந்த முறையீட்டிலும் பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வரும் பட்சத்தில், உச்சநீதிமன்றத்தில் முறையிடலாம்.
* உச்சநீதிமன்றமும் கைவிரித்தால், சட்ட ரீதியாக ஓ.பி.எஸ் வசம் உள்ள அனைத்து கதவுகளும் கிட்டத்தட்ட முடிந்தது என்றே சொல்லலாம்.
* அப்படியே நீதிமன்றம் மூலமாக ஓ.பி.எஸ்.,க்கு சாதகமாக தீர்ப்பு வருவதுபோன்று தெரிந்தாலும், சசிகலா பொதுச்செயலாளர் ஆனது தொடர்பான வழக்கு பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது போல, ஓ.பி.எஸ்.,சின் வழக்கும் தொடர் நிலுவையில் வைத்திருக்கலாம்.
* அடுத்ததாக நிரந்தர பொதுச்செயலாளராக நியமித்த ஜெயலலிதாவின் பதவியை பழனிசாமி பறித்துவிட்டதாகவும், ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்ததாகவும் தொண்டர்களிடம் முறையிட்டு பழனிசாமியை எதிர்க்கலாம்.
* அல்லது, டில்லி சென்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்து ஆலோசனை பெறலாம்.
* இப்படி எதுவும் இல்லாத பட்சத்தில் சசிகலா உடன் சேர்ந்து புதிய கட்சியை துவக்கலாம் அல்லது பா.ஜ.க.,விடம் ஐக்கியம் ஆகலாம்.