உயிர் பறிக்கும் கொருக்குப்பேட்டை.. அடுத்தடுத்து 2 செல்போன் பறிப்பு.. ஒரு உயிர் இழப்பு!

Su.tha Arivalagan
Jan 23, 2023,10:39 AM IST
சென்னை: சென்னை கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில்களில் கதவோரம் நின்று செல்போன் பேசிக் கொண்டு செல்வோரை குச்சியால் அடித்து செல்போன் பறிக்கும் செயல்கள் அதிகரித்து வருகின்றன. இதில் ஒருவரது உயிர் அநியாயமாக பறி போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



காக்கா முட்டை படத்தில் ஒரு காட்சி வரும்.. சில சிறார்கள் கையில் குச்சியுடன் தண்டவாளம் அருகே நின்றிருப்பார்கள். ரயிலில் ஒருவர் படியில் அமர்ந்து செல்போன் பேசிக் கொண்டிருப்பார். ரயில் அருகே வந்ததும், ஒரு சிறுவன் கையில் உள்ள குச்சியால் அந்த நபரை அடித்து செல்போனை பறிப்பான். இது கற்பனையில் நடப்பதல்ல.. நிஜமாகவே சென்னையின் சில பகுதிகளில் நடக்கும் உண்மை சம்பவம்தான்.

குறிப்பாக வண்ணாரப்பேட்டை ரயில் நிலையப் பகுதியில் இது அடிக்கடி நடக்கும். இதுதொடர்பாக பெருமளவில் புகார்கள் குவிந்ததைத் தொடர்ந்து அங்கு போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு அது குறைந்தது. ஆனால் தற்போது கொருக்குப்பேட்டை ரயில்நிலையப் பகுதியில் இது அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது.

கொருக்குப்பேட்டை ரயில் நிலையப் பகுதியில் இப்படித்தான் பல இளைஞர்கள் கையில் குச்சியுடன் நின்று ரயில்களில் ஜன்னலோரம், கதவோரம் செல்போன் பேசிக் கொண்டு போனால் அவர்களை குச்சியால் அடித்து செல்போன்களைப் பறிக்கின்றனர். இதில் சமீபத்தில் அடுத்தடுத்து 2 வெளி மாநிலத்தவர்கள் ரயிலிலிருந்து கீழே விழுந்துள்ளனர். அதில் ஒருவர் படுகாயமடைந்தார். இன்னொருவர் உயிரிழந்துள்ளார். 

கடந்த வெள்ளிக்கிழமையன்று, கொருக்குப்பேட்டை ரயில் நிலையம் மற்றும் பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையம் இடையிலான பகுதியில் விவேக் குமார் என்ற பீகாரைச் சேர்ந்த மத்திய தொழிலக பாதுகாப்புப் படை வீரர் ரயிலிலிருந்து கீழே விழுந்து காயமடைந்தார். ரயிலில் பயணித்த ஒருவர் தன்னை கீழே தள்ளிவிட்டு செல்போனுடன் மாயமாகி விட்டதாக அவர் கூறினார். ஆனால் போலீஸ் தரப்பில் இது மறுக்கப்பட்டது. விவேக் குமார், அவராகவே தவறி கீழே விழுந்தார் என்றும், அவரது செல்போன் திருடு போகவில்லை. அவர் விழுந்த இடத்திலேயே கிடந்தது என்றும் கூறியனர். 

இந்த நிலையில் சனிக்கிழமை இன்னொரு சம்பவம் நடந்துள்ளது. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில்,  மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ரோனி ஷேக் என்பவர் டிக்கெட் எடுக்காமல், எஸ் 4 முன்பதிவுப் பெட்டியில் பயணம் செய்து வந்தார்.  படியில் அமர்ந்து செல்போன் பேசியபடி அவர் வந்து கொண்டிருந்தார். ரயில் கொருக்குப்போட்டை - பேசின்பிரிஜ் இடையே கிராஸ் செய்தபோது, தண்டவாளம் அருகே நின்றிருந்த சிலர் கையில் குச்சியால் ரோனியை அடித்துள்ளனர். அதில் அவர் செல்போனுடன் கீழே விழுந்தார். விழுந்த வேகத்தில் தலையில் அடிபட்டு அங்கேயே இறந்து விட்டார் ரோனி.

கேரளாவில் கட்டுமானப் பணியைச் செய்வதற்காக தனது நண்பர் அஸ்ராஜ் ஷேக்குடன், ரோனி சென்று கொண்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது. கொருக்குப்பேட்டை ரயில் நிலையம் அருகே இப்படி குச்சியால் அடித்து ரயில் பயணிகளிடம் செல்போன் திருடும் கும்பலின் அட்டகாசம் அதிகரித்து வருவது பயணிகளிடையே பெரும் பீதியை ஏற���படுத்தியுள்ளது. இதில் ஒரு உயிரிழப்பும் நேரிட்டிருப்பதால் போலீஸார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட வேண்டியது அவசியமாகும்.