குருகிராமை சூறையாடிய கலவரம்.. பீதியில் குடும்பங்கள்.. அதிர வைக்கும் தகவல்கள்

Su.tha Arivalagan
Aug 03, 2023,09:26 AM IST
குருகிராம்: ஹரியானா மாநிலத்தின் குருகிராம் (டெல்லிக்கு வெகு அருகே உள்ள பகுதி இது) நகரில் மிகப் பெரிய கலவரம் கோர தாண்டவமாடியுள்ளது. முஸ்லீம் குடும்பங்கள் பெரும் அச்சத்துடன் உள்ளனராம்.

ஹரியானாவின் நு என்ற இடத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளத்தினர் நடத்திய பேரணி பெரும் வன்முறை மற்றும் கலவரத்தில் முடிந்ததால் ஹரியானா மாநிலத்தின் பெரும் பகுதிகள் பற்றி எரியும் நிலைக்குத் தள்ளப்பட்டன. இந்த கலவரத்தால் ஏற்பட்ட பாதிப்பை சொல்லில் சொல்ல முடியாது என்கிறார்கள். பலரும் கொல்லப்பட்டுள்ளனர். விரட்டி விரட்டி வேட்டையாடப்பட்டுள்ளனர். பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

குருகிராம் தற்போது கலவரத்தின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. பஜ்ரங் தளம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தர்கள் கையில் துப்பாக்கியுடன் படு சகஜமாக நடமாடுவது போன்ற வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக பரீதாபாத்தில் போலீஸார் அமைதியாக வேடிக்கை பார்க்க பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த ஒருவர் துப்பாக்கியால் சுடும் வீடியோவை "விசில்புளோயர்" முகம்மது ஜூபைர் போட்டுள்ளார்.



இந்த நிலையில் குருகிராம் பகுதியில் தங்கியிருந்த முஸ்லீம் குடும்பங்கள்  அச்சத்தில் உறைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட முஸ்லீம் குடும்பங்கள் அங்கு தங்கியிருந்தன. தற்போது வெறும் 15 குடும்பங்கள் மட்டுமே உள்ளன. மற்றவர்கள் அங்கிருந்து போய் விட்டனராம். மிச்சம் உள்ள 15 குடும்பங்களும் கூட அங்கிருந்து போக வசதியில்லாத காரணத்தால் போக முடியாமல் தவிக்கின்றனராம்.

ஷமீம் ஹூசேன் என்ற 25 வயது இளைஞர் அழுதபடியே என்டிடிவிக்கு அளித்துள்ள பேட்டியில், சிலர் வந்தனர். முஸ்லீம் குடும்பங்கள் இங்கே இருக்கக் கூடாது. இடத்தை காலி பண்ணுங்க என்று மிரட்டினர். இதனால் பலரும் போய் விட்டனர். ஆனால் எங்களிடம் இங்கிருந்து செல்ல பணம் இல்லை. உள்ளூர் கடைக்காரர்களிடம் நிறைய கடனும் வாங்கியுள்ளோம். அதையும் திருப்பிச் செலுத்த முடியாமல் போகவும் முடியாது. எனக்கு ஏதாவது நடந்தாலும் பரவாயில்லை. ஆனால் எனக்கு ஒரு வயது மகன் இருக்கிறான். அவனை நினைத்தால்தான் பயமாக இருக்கிறது.  அரசும், மாவட்ட நிர்வாகமும், உள்ளூர் மக்களும் எங்களுக்குப் பாதுகாப்புத் தர வேண்டும். தயவு செய்து எங்களுக்கு உதவுங்கள் என்றார் அவர்.

கிட்டத்தட்ட 60 பேர் கொண்ட கும்பல் வந்து இந்த முஸ்லீம்கள் தங்கியுள்ள இடத்தின் உரிமையாளரை மிரட்டி விட்டுப் போயுள்ளதாக சொல்கிறார்கள். இரண்டு நாள்தான் டைம். அதற்குள் இவர்ககள் காலி செய்திருக்க வேண்டும் என்றும் அந்தக் கும்பல் மிரட்டியுள்ளதாம். இந்தக் கும்பல் நிச்சயம் கலவரத்தில் ஈடுபடும் என்று முஸ்லீம்கள்  அச்சத்தில் உள்ளனர்.