ராஜ்பவனுக்கு இனி போக மாட்டேன்.. கவர்னர் பக்கத்துல நிற்பதே பாவம்.. மமதா பானர்ஜி அதிரடி!

Su.tha Arivalagan
May 11, 2024,05:48 PM IST

கொல்கத்தா: மேற்கு வங்காள ஆளுநர் இனி என்னை சந்திக்க கூப்பிட்டால் நான் ராஜ் பவனுக்குப் போகமாட்டேன். தெருவில் கூட அவரை சந்திக்க நான் தயார். அவர் செய்த செயல்களையெல்லாம் பார்த்த பிறகு அவர் பக்கத்தில் நிற்பது கூட பாவம் என்று கூறியுள்ளார் முதல்வர் மமதா பானர்ஜி.


மேற்கு வங்காள மாநில ஆளுநர் சி.வ. ஆனந்தபோஸ் மீது ஆளுநர் மாளிகையில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய பெண் பாலியல் புகார் சுமத்தியுள்ளார். இதுதொடர்பாக போலீஸிலும் அவர் புகார்  கொடுத்துள்ளார். தன் மீதான புகார்களை ஆளுநர் ஆனந்த போஸ் மறுத்துள்ளார். மேலும் முதல்வர் மமதா பானர்ஜி அசிங்கமான அரசியல் செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த தீதிகிரிக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.




இந்த நிலையில் ஆளுநர் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை வைத்துப் பேசியுள்ளார் மமதா பானர்ஜி. இதுதொடர்பாக ஹூக்ளியில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றின்போது பேசுகையில் மமதா கூறியதாவது: 


மாண்புமிகு ஆளுநர் அவர்களே.. என் மீதான தவறு என்ன? முழுமையாக என்ன நடந்தது என்று கூட எனக்குத் தெரியாது. தீதிகிரியை அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளார் ஆளுநர். உண்மைதான்.. தாதாகிரி, தீதிகிரிக்கெல்லாம் இங்கு இடம் கிடையாது.  ஆனால் ஆளுநர் அவர்களே முதலில் நீங்க பதவி விலகுங்க. பெண்களை துன்புறுத்த நீங்கள் யார்.. பத்திரிகையாளர்களை அழைத்து ஒரு வீடியோவைக் காட்டியுள்ளார் ஆளுநர். ஆனால் அது முழு வீடியோ அல்ல. முழு வீடியோவை உங்களுக்குக் காட்டினாரா?


என்னிடம் இருக்கிறது. முழு வீடியோவும் என்னிடம் இருக்கிறது. எடிட் செய்யாத காப்பியும் இருக்கு, எடிட் செய்த காப்பியும் இருக்கு. முழு விவரமும் இன்னும் வெளியாகவில்லை. இன்னொரு வீடியோவும் வந்திருக்கிறது. ஒரு பென் டிரைவ். நிறைய நிறைய வந்து கொண்டே இருக்கின்றன.


ஆளுநர் இனி என்னை ராஜ்பவனுக்கு அழைத்தால், நான் போக மாட்டேன். அவர் கூப்பிட்டால் தெருவில் வைத்துத்தான் அவரை சந்திப்பேன். ஆனால் ராஜ் பவனுக்குப் போக மாட்டேன். நடந்ததையெல்லாம் கேள்விப்பட்ட பிறகு, கேட்ட பிறகு, அவர் பக்கத்தில் நிற்பதே பாவம் என்று கூறியுள்ளார் மமதா பானர்ஜி.