Welcome 2024: ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்.. பிறந்தது புத்தாண்டு.. உற்சாக வெள்ளத்தில் மக்கள்..!

Su.tha Arivalagan
Jan 01, 2024,12:12 AM IST
சென்னை: 2024ம் ஆண்டு கோலாகலமாக பிறந்துள்ளது. இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் புத்தாண்டை மக்கள் விதம் விதமாக கொண்டாடி வரவேற்றுள்ளனர்.

புத்தாண்டை வரவேற்க கடற்கரைகள், ஹோட்டல்கள், பொது இடங்களில் கூடிய கூட்டத்தால் அனைத்துப் பகுதிகளிலும் திருவிழாக் கோலமாக காணப்பட்டது.

சென்னையில் மெரீனா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, திருவான்மியூர் உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளிலும் மக்கள் கூட்டம் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்தது. கடற்கரைகளில் விளையாடியும், குடும்பத்தோடு அமர்ந்து சாப்பிட்டும், கேக் வெட்டியும் விதம் விதமாக மக்கள் புத்தாண்டைக் கொண்டாடினர். 

பல்வேறு விதமான நிகழ்ச்சிகளுக்கும் கடற்கரைகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  வாகனங்கள் கடற்கரை காமராஜர் சாலையில் தடை செய்யப்பட்டிருந்ததால் மக்கள் எந்தவிதமான அச்சமும் இல்லாமல் ரிலாக்ஸ்டாக நடமாட முடிந்தது.

 

இதேபோல புதுச்சேரியிலும் கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். பாடல் பாடியும், ஆடியும், விதம் விதமாக விளையாடியும் மக்கள் புத்தாண்டை வரவேற்று மகிழ்ந்தனர். தமிழ்நாட்டின் அனைத்து கடற்கரை நகரங்களிலும் பீச்களில் கூட்டம் அலை மோதியது.

இதேபோல ஹோட்டல்கள், மால்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் விதம் விதமான கொண்டாட்டங்களுக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அனைத்து பொது இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சென்னையில் கிட்டத்தட்ட 18,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வாகனத்  தணிக்கை, கண்காணிப்பு கோபுரங்கள், பட்ரோல் ரோந்து என பல வழிகளிலும் போலீஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். அத்துமீறி யாரேனும் நடந்தால் அவர்களை எச்சரித்து அனுப்பியும் வைத்தனர் போலீஸார். 

2023ம் ஆண்டு கொடுத்த அத்தனை சோகங்களையும் புறந்தள்ளி விட்டு, பிறந்துள்ள 2024ம் ஆண்டை சந்தோஷமாக வரவேற்று மக்கள் கொண்டாடிக் கொண்டுள்ளனர். இந்த வருடம்.. அனைவருக்கும் சந்தோஷத்தைத் தரட்டும்.