குடை ரெடியா.. இன்று முதல் 5‌ நாட்களுக்கு.. கனமழைக்கு வாய்ப்பு!

Su.tha Arivalagan
Nov 02, 2023,02:55 PM IST

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


ஏற்கனவே இலங்கை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு கீழ் அடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தற்போது தெற்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு கீழ் அடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தென் மாவட்டங்களில் கனமழை தொடரும் என  அறிவித்துள்ளது.


வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து வருவதால் இன்று முதல் 6 தேதி வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.




தமிழகத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ,சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் ,தேனி, திண்டுக்கல் ,மதுரை மற்றும் விருதுநகர் ஆகிய 12 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.


சென்னையை பொறுத்தவரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.