மக்கள் பிரச்சனையை பேசவே அமித்ஷாவுடன் சந்திப்பு.. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
சென்னை: முழுக்க முழுக்க மக்கள் பிரச்சனைகளுக்காக மட்டுமே அமித்ஷாவை சந்தித்தோம் என டெல்லியில் அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று காலை திடீர் என டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். எந்த அறிவிப்பும் இன்றி அவர் மேற்கொண்ட பயணம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தில் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று முக்கிய தலைவர்களை சந்திக்க உள்ளதாகவும், அதிமுக மற்றும் பாஜக கூட்டணி குறித்து பேச இருப்பதாகவும் தகவல்கள் பரவியது. அதேபோல் அதிமுக-பாஜக கூட்டணி குறித்து தான் பேச டெல்லி சென்றுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் காரசார விவாதங்களும் நடைபெற்று வந்தன.
டெல்லிக்குச் சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், பிரத்யேகமான நபர் யாரையும் பார்க்க வரவில்லை. டெல்லியில் திறக்கப்பட்டுள்ள எங்களது கட்சி அலுவலகத்தை பார்வையிடவே வந்துள்ளேன் என்று கூறினார். இதற்கிடையே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி ஆகியோரும் சென்னையில் இருந்து டெல்லிக்கு பயணம் சென்றனர். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் அதிமுக இணையவுள்ளதாக டெல்லி வட்டாரங்களில் பரபரப்பு நிலவியது.
இதனையடுத்து,நேற்று இரவு திடீரென உள்துறை அமைச்சர் அமித்ஷா வீட்டுக்குப் புறப்பட்டுப் போனார் எடப்பாடி பழனிச்சாமி. அவருடன் கே.பி. முனுசாமி, எஸ்.பி. வேலுமணி ஆகியோரும் சென்றிருந்தனர். இந்த சந்திப்பு எதற்காக என்று தெரியவில்லை. இதுதொடர்பாக எந்த அறிவிப்பும் நேற்று வெளியாகவும் இல்லை.
இந்நிலையில்,டெல்லியில் இருந்து சென்னை வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து அமித்ஷாவிடம் விவாதித்தோம். தமிழக திட்டங்களுக்கான நிதியை ஒதுக்கீடு செய்யவும் வலியுறுத்தினோம். கல்வி நிதி, இரு மொழிக் கொள்கை விவகாரம், தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து கோரிக்கை வைத்தோம். அதே போல் டாஸ்மாக் ஊழல் தொடர்பாக முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கவும், தமிழக சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்பாகவும் பேசியுள்ளோம். சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பேசவேயில்லை என்று தெரிவித்துள்ளார்.