"பாரத்" என்று மாற்றினால்.. ரூ. 14,000 கோடியை எடுத்து வைக்கணும்.. சு. வெங்கடேசன் தாக்கு!

Meenakshi
Sep 06, 2023,12:21 PM IST
மதுரை: இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றினால் ரூ. 14,000 கோடி செலவிட நேரிடும் என்று மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் கூறியுள்ளார்.

இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளன. ஜி-20 மாநாட்டிற்கான அழைப்பிதழில் "தி பிரசிடென்ட் ஆப் இந்தியா" என குறிப்பிடுவதற்கு பதிலாக "தி பிரசிடென்ட் ஆப் பாரத்" என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பெயர் மாற்றம் நாடு முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.



இந்த பெயர் மாற்றப் பஞ்சாயத்தை வைத்து சமூக வலைதளங்களில் பல்வேறு வகையிலான விவாதங்கள் நடைபெறுகின்றன. மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் போட்டுள்ள ஒரு டிவீட்டில், அரசியல் சாசனத்தின் முதல் வரியான "இந்தியாவின் மக்களாகிய நாங்கள்" ( We, the people of India) மீதே பா.ஜ.கவின் தாக்குதல். 
இந்தியா என்ற பெயரை மாற்ற ஆகக் கூடிய ரூ 14000 கோடி, தமிழ்நாட்டின் 17 லட்சம் 1 -5 வகுப்பு மாணவர்களுக்கு 30 ஆண்டுகள் காலை உணவு  வழங்கும் செலவுக்கு சமம் என்று கூறியுள்ளார்.

சரி ஒரு வாதத்துக்கு பாரத் என்று நாட்டின் பெயர் மாறுகிறது என்று வைத்துக் கொள்வோம்.. அதன் தொடர்ச்சியாக என்னவெல்லாம் மாற்றம் வர வாய்ப்பிருக்கிறது...  ஒரு லிஸ்ட் போடலாமா!

ஆதார் கார்ட், பேன் கார்ட், இந்திய ரயில்வே, இந்தியா என்று பெயர் உள்ள வங்கிகள், வாக்காளர் அடையாள அட்டை, ரேசன் கார்ட், டிரைவிங் லைசன்ஸ், இந்திய ருபாயின் பெயர் (பாரத் ரூபாய்), இந்திய தொழில் நிறுவனங்கள் பேன்றவற்றின் பெயர்கள் மாற்றப்படும் நிலை ஏற்படும். 

அதேபோல இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பெயரை மாற்ற வேண்டும். ஐபிஎல் என்ற பெயரை பிபிஎல் என்று மாற்றியாக வேண்டும். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பெயர் மாற்றப்பட வேண்டும். இந்தியா என்று எங்கெல்லாம் வருகிறதோ (ஐஐடி, ஐஐஎம், இஸ்ரோ, எய்ம்ஸ்) அதெல்லாமும் கூட மாற வேண்டியிருக்கலாம்.

இந்தியாவின் அடையாளங்களாக திகழ்பவற்றின் நிலை என்னாகும் என்றும் தெரியவில்லை. இந்திய அடையாளத்தை மாற்றி அமைப்பதினால் மற்ற நாட்டினர் மட்டுமின்றி இந்தியாவில் உள்ளவர்களுக்கும்  இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தலாம். இப்படியெல்லாம் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.

சரி வாசகர்களே.. நீங்க சொல்லுங்க.. இந்தியாவே ஓகேவா அல்லது பாரத்னு மாத்திக்கலாமா!