மதவாதத்தைத்தான் எதிர்க்கிறோம்.. மதத்தை அல்ல.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

Su.tha Arivalagan
Jan 06, 2023,12:03 PM IST
சென்னை: மதத்தை நாங்கள் எதிர்ப்பதாக சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் மதவாதத்தின் எதிரிகள்தானே தவிர, மதத்திற்கு அல்ல என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.




தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள 2500 கோவில்களில் மேற்கொள்ளப்படவுள்ள திருப்பணிக்காக ஒவ்வொரு கோவிலுக்கும் ரூ. 2 லட்சம் என்று மொத்தமாக  50 கோடி ரூபாய் நிதி வழங்கும் விழா சென்னையில் நடந்தது.

விழாவில் கலந்து கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியை அளித்தார். பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், திராவிடம் என்ற சொல்லைப் பிடிக்காதவர்கள் என்று நாங்கள் மதத்திற்கு எதிரானவர்கள் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். உண்மை அதுவல்ல. நாங்கள் மதவாதத்துக்குத்தான் எதிரானவர்கள், மதத்துக்கு அல்ல.  2021ம் ஆண்டு நான் அதிக நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட துறைகளின் பட்டியலில் 3வது இடத்தில் இந்து அறநிலையத்துறை உள்ளதே இதற்கு சான்று.

தமிழ்நாட்டில் உள்ள கோவில்கள், கலை, கலாச்சாரம், பண்பாட்டின் சின்னமாக விளங்குபவை. சமத்துவம் உலவும் இடங்கள்.  தமிழர்களின் சிற்பத் திறமையின் உதாரணங்கள். எனவே அதை கட்டிக் காப்பது நமது கடமை. அந்த நோக்கில்தான் தமிழ்நாடு அரசு செயல்பட்டுக் கொண்டுள்ளது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்ற திட்டம், சாதியின்  பெயரால் யாரையும் தள்ளி வைக்கக் கூடாது என்ற உயரிய நோக்கத்திற்காக கொண்டு வரப்பட்டது என்று முதல்வர் பேசினார்.

குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் உள்ளிட்ட பல்வேறு ஆதீனங்களின் தலைவர்கள் உள்பட பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.