வயநாடு இடைத் தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு.. ஜார்க்கண்ட்டிலும் முதல் கட்ட தேர்தல்!

Su.tha Arivalagan
Nov 13, 2024,10:26 AM IST

டெல்லி: பிரியங்கா காந்தி போட்டியிடும் வயநாடு லோக்சபா தொகுதியில் இன்று காலை முதல் விறுவிறுப்பான வாக்குப் பதிவு நடந்து வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்திலும் இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.


ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கு இன்று முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. காலையில் தொடங்கிய வாக்குப் பதிவு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. 81 தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டபைக்கு இன்று முதல் கட்டமாக 43 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. அதில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி 23 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளிலும், ராஷ்டிரிய ஜனதாதளம் 5 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.




கடந்த 2019 தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி 30 தொகுதிகளிலும் பாஜக 25 தொகுதிகளும் வெற்றி பெற்றன. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் - ராஷ்டிரிய ஜனதாதளம் கூட்டணிக்கு பெரும்பான்மைக்குத் தேவையான 47 தொகுதிகள் கிடைத்ததால் ஆட்சி அமைத்தது என்பது நினைவிருக்கலாம்.


இதுதவிர நாடு முழுவதும் 31 சட்டசபைத் தொகுதிகளுக்கும், வயநாடு லோக்சபா தொகுதிக்கும் இன்று இடைத் தேர்தல் நடைபெறுகிறது. வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். 


ராஜஸ்தானில் 7 சட்டசபைத் தொகுதிகள், மேற்கு வங்காளத்தில் 6, அஸ்ஸாம் 5, பீகார் 4, கேரளாவில் 3, மத்தியப் பிரதேசத்தில் 2, மேகாலயா, குஜராத், சட்டிஸ்கர், கர்நாடகத்தில் தலா 1 தொகுதிகளில் இன்று இடைத் தேர்தல் நடைபெறுகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்