சரியும் மலைகள்.. சிதையும் நிலங்கள்.. பாடம் கற்காத மனிதர்கள்.. இனியும் சுதாரிக்காவிட்டால் சிக்கல்தான்

Su.tha Arivalagan
Aug 01, 2024,06:57 PM IST

சென்னை:   கேரளாவில் நிலச்சரிவுகள் புதிதல்ல. ஆனாலும் அடுத்தடுத்து விபரீதங்கள் ஏற்பட்டும் கூட வனப்பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை நிறுத்தாமல் குடியேற்றங்கள் அதிகரித்துக் கொண்டே போவதால்தான் இதுவரை இல்லாத அசம்பாவிதத்தையும், உயிரிழப்புகளையும் கேரளா தற்போது சந்தித்துள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.


எல்லாவற்றுக்குமே ஒரு தாங்கு திறன் உண்டு. இந்த அளவுக்குத்தான் தாங்க  முடியும் என்ற ஒரு திறன் உண்டு. அதைத் தாண்டி போகும்போது சம்பந்தப்பட்டது வலுவிழக்கும், பலமிழக்கும், தளரும், உடையும், சிதையும். இது இயற்கை. இதை மீற யாராலும் முடியாது. உதாரணத்திற்கு ஒரு வாகனத்தில் இத்தனை பேரைத்தான் ஏற்ற முடியும் என்று இருக்கும்போது  அதைத் தாண்டி எடையை கூட்டினால் என்னாகும். அந்த வாகனம் குடை சாய்ந்து விடும். ஒரு சாதாரண லிப்ட்டிலேயே இத்தனை பேர்தான் ஏற முடியும் என்று அளவு உள்ளது. அந்த எடையைத் தாண்டி போகும்போது லிப்ட் வேலை செய்யாது.


பலவீனமடையும் தாங்குதிறன்




அதேபோலத்தான் மலைகளும். மலைகளுக்கும் ஒரு தாங்கும் திறன் உண்டு. அந்த தாங்கு திறனைத் தாண்டிய செயல்பாடுகள் அதிகரிக்கும்போது மலைகளும் கூட வலுவிழக்கும்.. எப்படி தெரியுமா.. மலைகளில் இயற்கையாகவே மண்ணின் ஸ்திரத்தன்மை அதிகமாக இருக்கும். காரணம், வனப்பகுதி. ஓங்கி உயர்ந்து வளர்ந்து நிற்கும் மரங்கள் அந்த மண்ணின் இறுகும் தன்மையை கட்டிக் காக்கின்றன. மரங்கள் அழியும்போது காடும் சேர்ந்து அழிகிறது.. காடு அழியும்போது மண்ணின் ஸ்திரத்தன்மை சீரழிகிறது. மண் ஸ்திரத்தன்மை போய் விட்டால் அதிக கன மழை காலத்தில் மண் தளர்ந்து நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன.


எனவே நிலச்சரிவுகள் இயற்கையானவை என்று எடுத்துக் கொள்ள முடியாது. அவை மனிதர்களின் தவறுகளால்தான் பெரும்பாலும் நடக்கின்றன. இன்று காடுகளில் என்ன நடக்கிறது.. காடுகளை அழிக்க ஆரம்பித்து விட்டோம். கட்டுமானங்கள் பெருகி விட்டன. வீடுகள் கட்டி குடியேற ஆரம்பித்து விட்டோம்.. மனித நடமாட்டம் அதிகரித்து விட்டது. இதனால் என்ன நடந்துள்ளது என்றால் வன விலங்குகள் வெளியேறி ஊருக்குள் வர ஆரம்பித்து விட்டன.. யானைகளின் வழித்தடங்கள் அழிக்கப்பட்டு விட்டன. வனங்கள் திணற ஆரம்பித்துள்ளன. இதனால் முதல் பாதிப்பு மனிதர்களுக்குத்தான்.


பூமி நமக்கு மட்டும் சொந்தமல்ல




இந்த பூமி முழுவதும் மனிதர்களுக்குச் சொந்தமல்ல.. நாம் காணும் இடங்கள் யாவும் நமக்கு சொந்தமானதில்லை. காடுகள்.. காடுகளாகவே இருக்க வேண்டும். அவை அப்படி இருந்தால்தான் நாம் பாதுகாப்பாக இருக்க முடியும். காடுகள் அழிந்தால் மனித இனமும் சேர்ந்துதான் அழியும். வனச் சுற்றுலா என்ற பெயரில் நடைபெறும் நிகழ்வுகள் எல்லாமே பெரும்பாலும் காடுகளுக்கு  கேடாகவே உள்ளன. ஒரு காட்டுக்குள் நாம் போய் விட்டு வந்த பிறகு அந்த காடு அதேபோல இருந்தால் அதுதான் உண்மையான இயற்கை சுற்றுலா. ஆனால் இன்று அப்படியா உள்ளது.. காடுகளுக்குள் போகும் நாம் என்ன செய்கிறோம். பிளாஸ்டிக் பொருட்களை போட்டு குப்பையாக்குகிறோம். இன்னும் இன்னும் காடுகளுக்கு ஆபத்தான செயல்களில் இறங்குகிறோம்.


மலை வாசஸ்தலங்கள் எல்லாமே ஒரு காலத்தில் நன்றாகத்தான் இருந்தன. ஆனால் வெள்ளையர்கள் எப்போது அவற்றை நகரங்களாக மாற்ற ஆரம்பித்தனரோ இன்று விபரீதமான கட்டத்திற்கு வந்து அவை நிற்கின்றன. ஊட்டி இன்று எப்படி இருக்கிறது.. அதை மாநகராட்சியாக மாற்றலாமா என்று சிந்திக்கும் அளவுக்கு அது நகரமாகி கான்க்ரீட் காடாக உருவெடுத்து நிற்கிறது. வெடிக்கக் காத்திருக்கும் வெடிகுண்டு என்றுதான் ஊட்டியைச் சொல்ல வேண்டும். ஊட்டி ஊட்டியாகவே இருக்க வேண்டும். அதை கோயம்பத்தூர் போல மாநகரமாக  மாற்ற முயன்றால் எப்படி.. அது காடு.. மலை.. அதை அதன் போக்கிலேயேதானே வைத்திருக்க வேண்டும். மாறாக அதன் இயல்பை தகர்த்து நம் இஷ்டத்திற்கு மாற்றினால் என்னாகும்.. விபரீதம்தான் மிஞ்சி நிற்கும்.


அதி கன மழைக்காலங்களில் நிலச்சரிவுகள்




வயநாடு விவகாரத்திற்கு வருவோம்.. கேரளாவைப் பொறுத்தவரை அதி கன மழைக்காலங்களில் நிலச்சரிவுகள் ஏற்படுவது என்பது தற்போது அதிகரித்து வருகிறது. காரணம் நீண்ட காலமாகவே அங்கு நடைபெறும் மனிதக் குடியேற்றங்கள், வர்த்தக ரிசார்ட்டுகளின் பெருக்கம், அதிகரிக்கும் கட்டுமானங்கள் ஆகியவை காரணமாக மலையின் இயல்பு மாறத் தொடங்கி விட்டது. மண் இளகத் தொடங்கி விட்டது.. அதன் ஸ்திரத்தன்மை குறையத் தொடங்கி விட்டது.. இதனால் பெரு மழைக்காலங்களில் மண்ணை இறுக்கிப் பிடித்து வைத்திருக்க முடியவில்லை.. எனவே நிலம் சரியத் தொடங்குகிறது.


2018ம் ஆண்டு இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, திருச்சூர், பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் அடுத்தடுத்து பல நிலச்சரிவுகள் ஏற்பட்டன. கிட்டத்தட்ட 155 பேர் மொத்தமாக பலியானார்கள். பல நாட்களாக விட்டு விட்டு தொடர் மழை பெய்ததன் விளைவாக ஏற்பட்ட நிலச்சரிவுகள் இது. இதில் இடுக்கி மாவட்டத்தில்தான் அதிக அளவாக 47 பேர் பலியானார்கள். அடுத்து 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வயநாடு மற்றும் மலப்புரத்தில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் மலப்புரத்தில் 59 பேரும், வயநாட்டில் 17 பேரும் பலியானார்கள்.


2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடுக்கி மாவட்டம் பெட்டிமுடி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 70 பேர் பலியானார்கள். இங்கு தொடர்ந்து 5 நாட்கள் கன மழை பெய்ததால் இந்த விபரீதம் ஏற்பட்டது.  2021 அக்டோபர் மாதம் கோட்டயம் மாவட்டம் கூட்டிக்கல் என்ற இடத்தில் 6 நாட்கள் பெய்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 13 பேர் பலியானார்கள். இப்போது முண்டக்கை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை இல்லாத அளவாக 200க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.


முன்கூட்டியே திட்டமிடுவது அவசியம்




இதுவரை நடந்த மிகப் பெரிய நிலச்சரிவு சம்பவங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை நடந்த மாவட்டங்கள் என்றால் அது வயநாடு, இடுக்கி, மலப்புரம் ஆகியவைதான். இந்தப் பகுதிகளில் உள்ள மலைப் பகுதிகளை காக்க துரித கதியில் நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்பதை இவை உணர்த்துகின்றன. மேலும் அதிக நாட்கள் மலைப் பகுதியில் மழை பெய்யும்போது அங்கு நிலச்சரிவு அபாயமும் உள்ளதை உணர்ந்து முன்கூட்டியே அரசும், மாவட்ட நிர்வாகங்களும் திட்டமிட வேண்டியதன் அவசியத்தையும் இவை உணர்த்துகின்றன.


இத்தனை நடந்தும் கூட கேரள அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரிவர எடுக்கவில்லையோ என்ற கேள்வி எழுகிறது. இங்கு கேரளா மட்டுமல்ல, மேற்குத் தொடர்ச்சி மலை உள்ள அனைத்து மாநிலங்களுக்குமே மிகப் பெரிய பாடம் கிடைத்துள்ளது. அனைவருமே சுதாரிக்க வேண்டிய கட்டத்தை வயநாடு சம்பவம் சுட்டிக் காட்டியுள்ளது. தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளுக்கு ஏற்கனவே பல்வேறு விதமான அபாயங்கள் உள்ளன. அவற்றை சரி செய்து, அந்த இயற்கை வரத்தைக் காக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.


ஹீரோவா.. வில்லனா?




ஹீரோவாக உள்ள இயற்கை, வில்லனாக மாறுவதற்கு ஒரு நூலிழை வித்தியாசம்தான்.. நம்மை காக்கத்தான் இயற்கை விரும்புகிறது.. ஆனால் நாம் அதை சீண்டும்போது வில்லனாகி விடுகிறது... காரணம், மனிதன் எனும் வில்லனிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ள அது முயல்கிறது. மனிதன் இயற்கையை பாதுகாக்க ஆரம்பித்தால்தான், முயற்சித்தால்தான் இந்த விளையாட்டுக்கு முடிவு வரும். நகரங்கள் எவ்வளவோ மோசமான நிலைக்குப் போய் விட்டன. குடிக்க தண்ணீர் கூட இல்லாத நிலையை நோக்கி பூமி போக ஆரம்பித்துள்ளது. கிளைமேட் சேஞ்ச் என்ற மிகப் பெரிய அபாயத்தை யாருமே இன்னும் சீரியஸாக உணர்ந்தது போலத் தெரியவில்லை. இனி வரும் காலங்களில் பெருமழைகளும் வெள்ளங்களும் சர்வ சாதாரணம் என்று சூழலியலாளர்கள் எச்சரிக்கிறார்கள். இப்போது காடுகளும் மலைகளும் கூட நமக்கு எதிராக திரும்பி விட்டால் பேரழிவுதான் எதிர்காலத்தில் நமக்குப் பரிசாக கிடைக்கும்.


சுதாரிக்க வேண்டியது நாம்தான்.. சுதாரித்தால்தான்  நல்லது.. அனைவருக்குமே இதில் பொறுப்பு உள்ளது. அரசுதான் பொறுப்பாக நடக்க வேண்டும் என்று இல்லை.. நாமும் கூட காடுகளுக்கோ மலைகளுக்கோ போனால் அதற்கு ஒரு துளி கூட பாதிப்பில்லாத வகையில் நடந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். கிட்டத்தட்ட அது தாய் வீடு போல.. நமக்கு நல்ல மழையையும், சுத்தமான காற்றையும் அள்ளி அள்ளி கொடுக்கத்தான் அந்த வீடு விரும்பும்.. எப்போது வேண்டுமானாலும் போகலாம் வரலாம்.. ஆனால் அது பத்திரமாக இருந்தால்தானே மீண்டும் மீண்டும் போக முடியும்.. தாய் வீட்டை யாராவது சிதைக்க முற்படுவார்களா. அப்படித்தான் இதுவும். காடுகளையும், மலைகளையும் காத்து நாமும் வளம் பெறுவோம்.. அவற்றையும் வாழ விடுவோம்.