நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் 100 வீடுகள் கட்டித் தருவோம்.. வரலாறு காணாத சேதம்.. ராகுல் அறிவிப்பு

Su.tha Arivalagan
Aug 02, 2024,06:31 PM IST

வயநாடு:   வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவால் மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஈடு செய்ய முடியாத இழப்பு இது. அந்தப் பகுதியில் 100 வீடுகள் கட்டித் தர காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கும் என்று லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.


லோக்சபா எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ராகுல் காந்தி, 2 முறை வயநாடு எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தற்போது ரேபரேலி தொகுதி எம்பியாக இருக்கும் ராகுல் காந்தி, தனது சகோதரியும் வயநாடு தொகுதியில் போட்டியிடப் போகும் வேட்பாளருமான பிரியங்காவுடன் வயநாடு வந்து நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார்.




நிலச்சரிவில் சிக்கி மீட்கப்பட்டு முகாம்களிலும் மருத்துவமனையிலும் வைக்கப்பட்டிருக்கும் மக்களையும் அவர் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், கேரளா மிகப் பெரிய சோகத்தை சந்தித்துள்ளது. வயநாடு மிகப் பெரிய சேதத்தை சந்தித்துள்ளது. இதுகுறித்து நான் மத்திய , மாநில அரசுகளிடம் பேசுவேன். இந்த பேரிடர் குறித்து உடனடியான, விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாக வேண்டும்.


இப்போதைய எங்களது முதல் இலக்கு பாதிக்கப்பட்டவர்களை மீட்பது, அவரகளுக்கு நிவாரணம் வழங்குவது மற்றும் மறு வாழ்வுக்கான ஏற்பாடுகள்தான். காங்கிரஸ் கட்சி அங்கு 100 வீடுகளை கட்டித் தரும். அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் இந்த நெருக்கடியான நேரத்தில் என்ன உதவி தேவையோ அதை நாங்கள் செய்து தருவோம்.


நான் எனது தந்தையை இழந்தபோது நான் பட்ட வேதனையை இப்போதும் மறக்கவில்லை. மிகப் பெரிய வேதனை அது. ஆனால் இங்கு பலரும் குடும்பங்களையே இழந்துள்ளனர். எனது வேதனையை விட இது மிக மிகப் பெரியது, வருத்தத்திற்குரியது. அவர்களது வேதனையை நான் உணர்ந்துள்ளேன். அவர்களுடன் நாங்கள் எப்போதும் இருப்போம் என்றார் ராகுல் காந்தி.