கண்ணீரில் மிதக்கும் வயநாடு.. நிலச்சரிவு நிவாரண நிதிக்கு.. நாலாபுறமிருந்தும் குவியும் நன்கொடைகள்!

Aadmika
Aug 03, 2024,05:00 PM IST

கொச்சி : கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காகவும், அப்பகுதியை புனரமைப்பதற்காகவும் இந்தியா முழுவதிலும் இருந்து நன்கொடைகள் குவிந்து வருகிறது.


வயநாடு நிவார பணிகளுக்காக கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு தங்களின் ஒரு மாத சம்பள தொகையான ரூ.50,000 ஐ வழங்குவதாக கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ.,க்கள் அறிவித்துள்ளனர். கேரள முதல்வர் பினராயி விஜயன், முதல்வர் நிவாரண நிதிக்காக ரூ1 லட்சமும், அவரது மனைவி கமலா ரூ.33,000ம் முதல்வர் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர்.




ஏற்கனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் எம்.வி.கோவிந்தன் கட்சி சார்பில் ரூ.25 லட்சம் அளித்துள்ளார். அதோடு தங்கள் கட்சியின் திரிபுரா மற்றும் தமிழகம் சார்பில் தலா ரூ.10 லட்சம் வழங்குவதாகவும் அவர் அறிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா முதல்வர் பேரிடர் நிவாரண நிதிக்காக தன்னுடைய ஒரு மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்குவதாக தெரிவித்துள்ளார். 


நடிகர் மோகன்லால், தாய்-தந்தை பெயர் தான் நடத்தும் விஷ்வசாந்தி அறக்கட்டளை சார்பில் ரூ.3 கோடி தருவதாக அறிவித்துள்ளார். 

இன்னும் பல அரசியல் தலைவர்கள், நடிகர்கள், தொழிலதிபர்கள் முதல்வர் நிவாரண நிதிக்காக நன்கொடைகள் அளித்து வருகிறார்கள்.


தமிழ்நாடு அரசு முதல் ஆளாக ஏற்கனவே ரூ. 5 கோடி நிதியுதவியை அளித்துள்ளது. தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த விக்ரம், சூர்யா ஜோதிகா கார்த்தி, கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு கலைஞர்களும் கூட நிதியுதவி அளித்துள்ளனர்.


அதேபோல நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நிவாரணப் பொருட்கள் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.