வயநாடு நிலச்சரிவு... ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடுக்கு ஒரு எச்சரிக்கை.. இப்போதே சுதாரிப்போம்!

Su.tha Arivalagan
Jul 31, 2024,07:55 PM IST

சென்னை: நமக்கு எல்லா வளங்களையும் அளித்து நம்மைப் பாதுகாத்த மண் இப்போது நம்மை காவுவாங்க ஆரம்பித்திருக்கிறது. இதற்கு இயற்கை காரணமல்ல, நாம் மட்டுமே காரணம். இம்மண்ணின் மீது நாம் நிகழ்த்திய வன்முறைக்கான எதிர்வினையை இப்போது நாம் அனுபவிக்கிறோம். இதன் தாக்கத்தை மட்டுப்படுத்தி, நாம் செய்த தவறுகளை சரிசெய்வதே இப்போது நம்முன் உள்ள முக்கியமான பணி. நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட மலை வாசஸ்தலங்களைக் காக்க வேண்டிய நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு துரிதமாக தொடங்க வேண்டிய நேரம் வந்து விட்டது.


கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்குப் பருவமழை தீவிரமாகப் பெய்து வருகிறது. இதன் காரணமாக வயநாடு மாவட்டத்தின் வைத்திரி தாலுகாவிற்குட்பட்ட மேப்பாடி, முண்டகை மற்றும் சூரல்மலை ஆகிய பகுதிகளில் ஜூலை 29ஆம் தேதி நள்ளிரவு மற்றும் 30ஆம் தேதி அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இப்பகுதிகளில் மட்டும் கடந்த 4 நாட்களில் 70 செண்டிமீட்டர் வரை மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.




இந்த நிலச்சரிவு மற்றும் சாலியார் உள்ளிட்ட ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சூரல்மலையில் உள்ள ஆற்றுப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் முண்டக்கையில் சிக்கியிருக்கும் 400க்கும் மேற்பட்ட குடும்பங்களை மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பலி எண்ணிக்கை உயரக்கூடும் எனவும் கூறப்படுகிறது. மாநில மற்றும் ஒன்றிய அரசின் பேரிடர் மீட்புப் படைகள், இந்திய ராணுவம் ஆகியோர் மீட்புப் பணியில் ஈடுபடுட்டு வருகின்றனர்.


இத்துயர நிகழ்வை இயற்கைப் பேரிடர் என்று இயற்கையின்மீது மட்டும் பழிபோட்டு நாம் எளிதில் கடந்துவிட முடியாது. காட்டுத் தீ, பெரும் புயல்கள், அதிதீவிர மழை, அதீத வெப்பம், பனிப்பாறை உருகுவது, கடல்மட்டம் உயர்வது, கொள்ளை நோய்கள் என இந்நூற்றாண்டில் நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு இயற்கை சீற்றத்திற்கும் மனித செயல்பாடுகளே அடிப்படைக் காரணமாக அமைந்துள்ளது. அப்படியொரு மனிதர்களே தங்கள் செயல்பாடுகளால் வரவழைத்துக்கொண்ட நிலச்சரிவுதான் இதுவும்.


நிலச்சரிவு ஏற்பட என்ன காரணம்?




ஒரு நிலச்சரிவு ஏற்படுவதற்கு பல்வேறு புவியியல் காரணங்கள் (Geological Causes), உருவவியல் காரணங்கள் (Morphological Causes), தட்பவெட்பம், நீரியல் மாற்றங்கள், நிலநடுக்கம் போன்ற புறக்காரணங்களும் (Physical Causes) இதைத் தவிர மனித செயல்பாடுகளும் (Human Activities) காரணிகளாக அமைகின்றன. பொதுவாகப் பனிமலைகள் உருகுவது, அதீத மழைப்பொழிவு, மணல் அரிப்பு, நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, நிலத்தடி நீர்மட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் மேலும் இவற்றோடு மனித செயல்பாடுகளாலேயே நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன. பல சமயங்களில் மேற்குறிப்பிட்ட ஒன்றுக்கும் மேற்பட்ட காரணங்களின் கூட்டு விளைவுகளால்கூட நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன.


வயநாடு மாவட்டத்தில் தற்போது நிலச்சரிவு ஏற்பட்டுள்ள வைத்திரி தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் இப்படி ஒரு விபத்து நடக்கும் என்பதை பல ஆய்வாளர்களும் தொடர்ச்சியாக எச்சரித்து வந்தனர். கேரளாவின் பிற பகுதிகளைப்போல வயநாட்டிலும் 6 வகையான மழைப்பொழிவு நிலவிவந்தது. பிப்ரவரி மாதம் பெய்யும் கோடை மழை கும்ப மழை என்றும், ஏப்ரலில் பெய்யும் குறைவான மழை மேட அல்லது விஷ்ணு மழை என்றும் அழைக்கப்படுகிறது. மே-ஜூனில் தென்மேற்குப் பருவமழை தொடங்குகிறது. ஆகஸ்டில் பெய்யும் அதிக மழை மிதுன மழை என்றும் செப்டம்பரில் வெயிலுடன் அவ்வப்போது பெய்யும் லேசான மழை சிங்க மழை என்றும், அக்டோபரில் இடியுடன் பெய்யும் பெருமழை துலா மழை என்றும் அழைக்கப்படுகிறது.


காலநிலை மாற்றத்தின் தாக்கம்




ஆனால், காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் இந்த நடைமுறை பெரியளவில் மாறியுள்ளதை பல்வேறு ஆய்வுகளும் உறுதிபடுத்தியுள்ளதாக Flood and Fury எனும் புத்தகத்தை எழுதிய விஜூ கூறுகிறார். குறிப்பாக இந்திய வானிலை ஆய்வுத்துறை மேற்கொண்ட ஆய்வு ஒன்று 2013 முதல் 2017 இடைப்பட்ட காலத்தில் வயநாட்டில் மழைப்பொழிவின் அடர்த்தி குறைந்து வந்துள்ளதாகக் குறிப்பிடுகிறது. மேலும் Climate Trends in Wayanad: Voices from the Community’ எனும் ஆய்வானது  வயநாட்டில் மிதமான அளவில் மழைபொழியும் நாட்களின் எண்ணிக்கை குறைந்தும், அதிகமான அளவில் மழைபொழியும் நாட்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் கூறுகிறது. மேலும் இந்த ஆய்வு பெருமழை பெய்யும் நாட்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் கூறுகிறது. குறைவான நேரம் அல்லது குறைவான நாட்களில் அதிகப்படியான மழை பெய்யும் நிகழ்வுகள் இந்தியா முழுக்க அதிகரித்து பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.


ஜூன் 2018ல் கோழிக்கோடு, கன்னூர், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு தொடர்பாக இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் அங்கு ஒரு ஆய்வை மேற்கொண்டது. அந்த ஆய்வில் நிலச்சரிவு ஏற்பட பெருமழை ஒரு காரணம் என்றாலும், பல இடங்களில் அறிவியல்பூர்வமற்ற வகையில் மலைச்சரிவுகளில் ஏற்படுத்தப்பட்ட கட்டிடங்களும் நிலச்சரிவுக்கு முக்கியக் காரணம் எனக் கண்டறிந்தது.


கட்டடக் குவியலால் ஏற்பட்ட மாற்றம்




மேலும் ஒட்டுமொத்த வயநாடு மற்றும் குறிப்பாக தற்போது நிலச்சரிவு ஏற்பட்ட வைத்திரி தாலுகாவில் கடந்த 20 ஆண்டுகளில் நிலப்பயன்பாடு அதிகளவில் மாற்றமடைந்துள்ளது. குறிப்பாக இயற்கையாக அமைந்த மலைச்சரிவுகள் மற்றும் மலைமுகடுகளைத் தோண்டி, பிளந்து கட்டிடங்களை எழுப்பி அப்பகுதியின் நில அமைப்பியலே மாற்றப்பட்டுவிட்டது. பெரும் அளவில் மரங்கள் வெட்டப்பட்டதன் விளைவாக மணலை இறுகப்பிடிக்கும் வேர்கள் இல்லாததன் காரணமாக, ‘நிலச்சரிவை தாங்கும்’ (Immunity towards landslide) திறனை மண் இழந்திருக்கிறது. இத்தன்மையை இழந்த நிலப்பரப்பில் அதிதீவிர மழைப்பொழிவு மணல் அரிப்பையும், இவ்வாறான மணல் சரிவையும் அடிக்கடி ஏற்படுத்தும் என்று எச்சரிக்கின்றனர் ஆய்வாளர்கள்.


வயநாட்டில் அதிக நிலச்சரிவைச் சந்தித்த இடமாக உள்ளது வைத்திரி தாலுகா. Hume Centre for Ecology and wildlife Biology மேற்கொண்ட ஆய்வின்படி வயநாட்டின் தென்மேற்குப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 90 விழுக்காடு நிலச்சரிவுகள் மலைச்சரிவு 30 டிகிரியாக இருந்த இடங்களில் நிகழ்ந்துள்ளதாகக் கூறுகிறது. மலைகளை வெட்டி, பிளந்து, தோண்டி அதன் இயற்கையான அமைப்பையே மாற்றியதால் அதிக அளவு மழையைத் தாக்குப் பிடிக்காமல் நிலச்சரிவு ஏற்படுகிறது. தற்போது நிலச்சரிவு ஏற்பட்ட அன்று 24 மணிநேரத்தில் வைத்திரி தாலுகாவில் மட்டும் 28 செண்டிமீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.


நீலகிரி - கொடைக்கானலுக்கு எச்சரிக்கை




வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட மேப்பாடி, முண்டகை மற்றும் சூரல்மலை ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய வைத்திரி தாலுகா முழுவதும் மாதவ் காட்கிலின் மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு தொடர்பான WGEEP அறிக்கையில் சூழல் கூருணர்வு மிக்க மண்டலம் 1 (ESZ 1) என வகைப்படுத்தப்பட்டுள்ளது. ESZ 1 என வரையறுக்கப்பட்ட பகுதிகளில் காடுகளை, காடு பாதுகாப்பு சாராத திட்டங்களுக்காகவும், வேளாண் நிலத்தை வேளாண்மை அல்லாத பிற தேவைக்காகவும் நிலப்பயன்பாடு மாற்றம் செய்ய முடியாது. ஆனால், இந்த அறிக்கையினையும் அதன் பின்னர் வந்த கஸ்தூரி ரங்கன் குழுவின் அறிக்கையினையும் கேரள அரசு இன்று வரை ஏற்றுக் கொள்ளவில்லை.


தொடர்ச்சியாக நிலப்பயன்பாடு மாற்றம், வரைமுறையற்ற கட்டுமானங்கள், காடழிப்பு, காலநிலை மாற்றத்தின் தீவிரத்தால் அதிகரிக்கும் மழைப்பொழிவு ஆகியவையே இப்பேரழிவுக்குக் காரணம். நிலம் வலுவிழப்பதைக் காடழிப்புடனும், நிலச்சரிவைப் பெருமழையுடனும், பெருமழையைக் காலநிலை மாற்றத்துடனும் தொடர்புபடுத்திப் பார்க்க நாம் தவறினால் இப்பேரழிவுகளைத் தடுக்க முடியாது. தமிழ்நாடு அரசு இதனை ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஊட்டி, கொடைக்கானல், கோத்தகிரி, குன்னூர், வால்பாறை ஆகிய பகுதிகளில் தொடர்ந்து நிலச்சரிவு ஏற்படுவதை கவனத்தில் கொள்ள வேண்டும்.


தமிழ்நாடு அரசு செய்யவேண்டியவை




1. நீலகிரி மாவட்டம் உட்பட மாதவ் காட்கில் குழு (WGEEP) அறிக்கையில் சூழல் கூருணர்வு மண்டலங்களாக தமிழ்நாட்டில் அடையாளம் காணப்பட்ட பகுதிகள் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படும் வாய்ப்புள்ள பகுதிகள் என ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள கேளிக்கை விடுதிகள், வணிக வளாகங்கள் காலிசெய்யப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படவேண்டும். மேலும் குறிப்பிட்ட அந்த இடங்களில் புதிதாக எந்தவிதமான கட்டுமானங்கள், குவாரிகள், சுரங்கங்கங்கள் உள்ளிட்டவற்றை அனுமதிக்கக்கூடாது.


2. அயல் படர் தாவரங்களைக் கட்டுப்படுத்தி, அந்த மலைகளுக்கு உரிய இயல் தாவரங்களை மீட்டுருவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


3. ஆண்டுதோறும் உதகையில் நடைபெறும் மலர்க் கண்காட்சியை மேட்டுப்பாளையம் அல்லது பொள்ளாச்சிக்கு மாற்றவேண்டும். சுமார் 25-30 ஆண்டுகளுக்கு முன்னர், உதகையை சுற்றுலாத்தலமாக பிரபலப்படுத்த இத்தகைய விழாக்கள் தேவைப்பட்டன. ஆனால் இப்போது குறிப்பிட்ட அந்த ஒரு வார காலத்திற்கு மட்டும் பல லட்சக்கணக்கான மக்கள் உதகையில் கூடுகிறார்கள், அம்மலைகளுக்கு அது மிகப்பெரிய அழுத்தமாக அமைகிறது.


4. தமிழ்நாட்டில், மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் நீர்மின் திட்டங்களை மேலும் விரிவாக்கம் செய்யவோ புதிய நீர்மின் திட்டங்களைத் தொடங்கவோ கூடாது.


5. நீலகிரியில் நிலச்சரிவு குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளவும், அவற்றைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், திறன் மேம்பாட்டு பயிற்சிகளை அளிக்கக்கூடிய வகையிலும் ‘மாநில நிலச்சரிவு மேலாண்மை மையம்’ மேட்டுப்பாளையத்தில் அமைக்கப்படவேண்டும். (Landslide Management Centre), அதன் மற்றொரு மையம் வத்தலகுண்டுவில் அமைக்கப்படவேண்டும்.


இயற்கை காரணமல்ல.. நாம்தான்!




இறுதியாக கஸ்தூரி ரங்கன் அளித்த பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு ஒன்றிய அரசு மேற்குத் தொடர்ச்சி மலைகளின் சில பகுதிகளை சூழல் கூருணர்வு மிக்க மண்டலமாக அறிவிப்பு செய்வதற்கான வரைவு அறிக்கையை 06.07.2022ல் வெளியிட்டிருந்தது. உடனடியாக இந்த வரைவு அறிவிக்கையை கேரளா, கர்நாடகா மாநிலங்களுடன் கலந்தாலோசித்து, இறுதி செய்து அரசிதழில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு தொடங்க வேண்டும் எனக் கோருகிறோம்.


நமக்கு எல்லா வளங்களையும் அளித்து நம்மைப் பாதுகாத்த மண் இப்போது நம்மை காவுவாங்க ஆரம்பித்திருக்கிறது. இதற்கு இயற்கை காரணமல்ல, நாம் மட்டுமே காரணம். இம்மண்ணின் மீது நாம் நிகழ்த்திய வன்முறைக்கான எதிர்வினையை இப்போது நாம் அனுபவிக்கிறோம். இதன் தாக்கத்தை மட்டுப்படுத்தி, நாம் செய்த தவறுகளை சரிசெய்வதே இப்போது நம்முன் உள்ள முக்கியமான பணி.


நன்றி: பூவுலகின் நண்பர்கள் https://poovulagu.org/