கேரளா நிலச்சரிவு: நிவாரண பணிகளுக்கு ரூ.50 லட்சம் கொடுத்த சூர்யா, ஜோதிகா, கார்த்தி!

Meenakshi
Aug 01, 2024,04:39 PM IST

சென்னை: வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சூர்யா, ஜோதிகா, கார்த்தி ஆகியோர் நிவாரணமாக ரூ.50 லட்சம் கொடுத்துள்ளனர். 


கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29ம் தேதி  கனமழை காரணமாக அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 280-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.சுமார் 1000த்திற்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. இந்த நிலச்சரிவில் 3 கிராமங்கள் அடியோடு காணாமல் போயுள்ளன. மேலும், உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. நிலச்சரிவு காரணமாக நாடே சோகத்தில் மூழ்கியுள்ளது. 




நிலச்சரிவின் மீட்பு பணிகள் மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. மாநில அரசின் பேரிடர் மீட்பு படைகள், தேசிய பேரிடர் மீட்பு படைகள் களத்தில் இறங்கி தீவிரமாக மீட்பு பணிகளை செய்து வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கிய 150க்கும் அதிகமானவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கிய உடல்கள் காண்போர் மட்டுமின்றி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்த பெருந்துயரில் மீள முடியாமல் மக்கள் பரிதவிக்கின்றனர். 


குவியும் நிதியுதவி


கேரள நிலச்சரிவுக்கு நிவாரண நிதி வழங்குமாறு அந்த மாநில முதல்வர் பிணராயி விஜயன் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து தமிழ்த் திரையுலகிலிருந்து முதல் ஆளாக நடிகர் விக்ரம் ரூ. 50 லட்சம் நிவாரண உதவியை அறிவித்திருந்தார். 


தற்போது பெருந்துயரில் பங்கேற்கும் வகையில் கேரளா நிலச்சரிவு நிவாரண பணிகளுக்காக, நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா மற்றும் நடிகர் கார்த்தி  ஆகியோர் ரூ. 50 லட்சம் கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்கள். மேலும் நிலச்சரிவில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.