வயநாடு நிலச்சரிவு: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 2 கோடி நிதியுதவி வழங்கிய நடிகர் பிரபாஸ்

Meenakshi
Aug 07, 2024,01:19 PM IST

ஹைதராபாத்:   வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.2 கோடியை கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார் நடிகர் பிரபாஸ்.


வயநாடு மாவட்டத்தில் கடந்த ஜூலை 29-ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவால் முண்டக்கை, சூரல்மலை, மேம்பாடி ஆகிய கிராமங்கள்  உருக்குலைந்து போனது. இந்த பகுதிகளில் உள்ள வீடுகள் அனைத்தும் மண்ணோடு மண்ணாக தரைமட்டமானது. இந்த நிலச்சரிவில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400க் கடந்து உள்ளது. மேலும் பலரை தேடும் பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது.




ராணுவம், இந்திய பேரிடர் மீட்பு குழுவினர், கேரள காவல் துறையினர், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலரும் களப்பணி ஆற்றி வருகின்றனர். மண்ணுக்குள் இன்னும் பலரின் உடல்கள் புதைந்துள்ளதால் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வயநாடு மக்களுக்கு உதவும் பொருட்டு நாடு முழுவதிலும் இருந்து ஏராளமானோர் கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடைகளை வாரி வழங்கி வருகின்றனர். கேரளாவின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் மோகன்லால் ரூ.3 கோடி வழங்கியுள்ளார். மம்முட்டி, துல்கர் சல்மான் ஆகியோர் தலா 25 லட்சம் வழங்கியுள்ளனர்.


கேரள பிரபலங்கள் மட்டும் இன்றி தமிழ் பிரபலங்களான விக்ரம் ரூ.20 லட்சமும், நடிகர்கள் சூர்யா, ஜோதிகா, கார்த்தி ஆகியோர் சேர்ந்து ரூ.50 லட்சமும், நடிகை நயன்தாரா ரூ.25 லட்சமும் வழங்கியுள்ளனர். நடிகர் சிரஞ்சீவி, ராம்சரண் இணைந்து ரூ.1 கோடியும், நடிகர் அல்லு அர்ஜூன் ரூ.25 லட்சமும் கொடுத்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து பான் இந்திய சூப்பர்ஸ்டாரான பிரபாஸ்சும் நன்கொடையாக ரூ.2 கோடி வழங்கியுள்ளார்.