வயநாடு நிலச்சரிவு.. 200க்கும் மேற்பட்டோரின் கதி என்ன?.. தீவிரமாக தொடரும் தேடுதல் வேட்டை

Manjula Devi
Aug 05, 2024,11:33 AM IST

வயநாடு: வயநாடு நிலச்சரிவில் சிக்கி மாயமாக உள்ள  200க்கும் மேற்பட்டோரின் நிலைமை என்ன என்று தெரியாத நிலையில் அவர்களை தேடும் பணியில் மீட்புப் குழுவினர் ஏழாவது நாளாக போராடி வருகின்றனர்.


மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள வயநாடு மாவட்டம் கடந்த ஜூலை 30-ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவால் உருக்குலைந்து போனது. குறிப்பாக முண்டக்கை, மேப்பாடி, சூரல் மலை போன்ற பகுதிகள் மண்ணோடு மண்ணாக தரைமட்டமானது. இதில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 385 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 200க்கும் மேற்பட்டோரின் கதி என்ன ஆனது என்றே தெரியவில்லை. ராணுவம், இந்திய பேரிடர் மீட்பு குழுவினர், கேரள ராணுவத்தினர், காவல் துறையினர் உள்ளிட்ட பலரும் களப்பணி ஆற்றி வருகின்றனர். 




இதுவரை அடையாளம் தெரியாத 8 பேர் உடல்களை, அடையாளம் காண்பதற்கு உறவினர்கள் யாரும் வருவார்களா என்ற அடிப்படையில் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. இருப்பினும்  தொடர்ந்து  8 பேரின் உடல்களை அடையாளம் காணவில்லை. இதனால் அடையாளம் காணாத சடலங்களை  நல்லடக்கம் செய்ய மத்திய அரசு வலியுறுத்தியது. இதையடுத்து மேப்பாடி அரசு மருத்துவமனையில் இருந்து கொண்டுவரப்பட்ட 8 சடலங்களும் புத்துமலை அருகே ஒரே இடத்தில் நேற்று இரவு நல்லடக்கம் செய்யப்பட்டன.


இந்த நிலையில் முண்டக்கை, மேப்பாடி சூரல் மலை ஆகிய பகுதிகளில் ஏழாவது நாளாக தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதில் 1000 பேர் ஈடுபட்டுள்ளதாக கேரளா அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது‌. இந்த கோரிக்கையை பரிசீலனை செய்து வருவதாக மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி  தெரிவித்துள்ளார்.