பெய்லி பாலம்.. இரவு பகலாக.. ராணுவம் உருவாக்கிய இரும்புப் பாலம்.. வயநாட்டிலிருந்து ஆறுதல் செய்தி
வயநாடு: நிலச்சரிவில் சிக்கி சீர்குலைந்த வயநாடு பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அங்கு ராணுவத்தினர் கனரக வாகனங்கள் செல்லக்கூடிய வகையில் தற்காலிக பாலத்தை அமைத்துள்ளனர். இதனை வடிவமைக்க பெண் வீராங்கனைகள் உள்ளிட்ட ராணுவத்தினர் இரவு பகலாக பாடுபட்டு இதை கட்டியுள்ளனர்.
கன மழை, பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இந்த இரும்புப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இடத்தில் இருந்த பாலத்தை வெள்ளம் அடித்துச் சென்றதால் தற்காலிகமாக இந்த பெய்லி பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
கேரளா வயநாடு பகுதிகளில் கடந்த திங்கட்கிழமை தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் செவ்வாய்க்கிழமை அதிகாலை முண்டக்கை, சூரல் மலை, மேப்பாடி, போன்ற இடங்களில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியே மண்ணோடு மண்ணாக தரைமட்டமானது. அங்கு குடியிருந்த 400 குடும்பங்கள் மண்ணில் புதைந்தன. இதுவரை 3,500 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதில் 100க்கும் மேற்பட்டோரின் நிலைமை கேள்விக்குறியாக உள்ளது.
நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க ராணுவப் படையினர், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், கேரள போலீஸ் சார், தீயணைப்புத் துறையினர் உள்ளிட்ட பலரும் மீட்புப் பணிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இருப்பினும் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர் மீட்பு குழுவினர்.
நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க முடியாமல் அப்பகுதிகளில் உள்ள தலைப்பாலம் முற்றிலும் அடித்து செல்லப்பட்டிருந்தது. இதனால் சூரல் மலை மற்றும் முண்டக்கை பகுதியில் ஜே சி பி மற்றும் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் செல்ல முடியாமல் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. இதனால் முண்டகை மற்றும் சூரல் மலைப்பகுதியை இணைக்க தற்காலிக பாலம் அமைக்க பேரிடர் மீட்பு குழுவினர் திட்டமிட்டனர். இது ஒன்று மட்டுமே தீர்வாக கருதப்பட்டது.
இதைத் தொடர்ந்து மீட்பு பணியை விரைந்து மேற்கொள்ள பெய்லி என்ற தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலத்திற்கு தேவையான இரும்பு கனரக பொருட்கள் விமானம் மற்றும் சாலை மார்க்கமாக வயநாடுக்கு கொண்டுவரப்பட்டன. இந்த பாலம் அமைக்க ராணுவத்தினரின் பணி மிக முக்கியமானது. சுமார் ஆறு மணி நேரத்திற்கு மேலாக விடிய விடிய போராடி இந்த பாலம் அமைக்கும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மோசமான வானிலையின் காரணமாக நிலவிய கடும் சவால்களும் எழுந்தன. அதைப் பொருட்படுத்தாமல் ராணுவத்தினர் பாலம் அமைக்கும் பணியை மேற்கொண்டனர். இதில் ஏராளமான பெண் வீராங்கனைகளும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்தப் பாலம் வெற்றிகரமாக செயல்பாட்டுக்கு வந்துள்ளது. தற்காலிக பாலம்ல் கனரக வாகனங்களும் கூட செல்லக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. குறைந்த நேரத்தில் விரைவாக இந்த பாலம் அமைக்க சிறப்பாக செயல்பட்ட ராணுவ வீரர்கள், பெண் வீராங்கனைகள், அதிகாரிகள் உள்ளிட்டவர்களை வயநாடு மக்கள் பாராட்டி வருகின்றனர்.
நாமும் நமது ராணுவத்திற்கு ராயலாக ஒரு சல்யூட் வைப்போம்!