உயிரைப் பணயம் வைத்து .. நிலச்சரிவால் பாதித்த பகுதிகளுக்கு வந்த ராகுல் காந்தி.. மக்கள் நெகிழ்ச்சி!
வயநாடு: வயநாடு நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த ராகுல் காந்தி குறித்து அந்தப் பகுதி மக்கள் பெரும் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து வயநாடு மாவட்ட மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டு அப்பகுதி முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் மக்கள் தங்களின் உடமைகளையும் உறவினர்களையும் இழந்து என்ன செய்வதென்று அறியாமல் தவித்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ராணுவ வீரர்கள் உள்ளிட்ட பலரும் நாலாவது நாளாக தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 3500 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தாரின் எண்ணிக்கை 316 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலரின் நிலைமை என்னவென்று தெரியாததால் அவர்களைத் தேடும் பணியில் தெர்மல் ஸ்கேனர் டெக்னாலஜி பயன்படுத்தி மீட்பு பணியினை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து அப்பகுதிகளை ஆய்வு செய்ய டெல்லியில் இருந்து நேற்று வயநாடு வந்தடைந்தார். அப்போது என் தந்தையை இழந்த போது எவ்வளவு துக்கம் அடைந்தேனோ அதே துக்கத்தில் தான் இப்போது இருக்கிறேன். இந்த துயரமான நேரத்தில் மக்களுடன் இருப்பது மிகவும் அவசியம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் வந்து சேர்வதை உறுதி செய்ய வேண்டும் என வயநாடு தொகுதி முன்னாள் எம் பி ராகுல் காந்தி நேற்று தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்த பின் வயநாடு மாவட்ட நிர்வாக மற்றும் பஞ்சாயத்து நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி இன்று ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது,
இதுபோன்ற மோசமான நிலையை கேரள மாநிலம் இதுவரை கண்டதில்லை. வயநாட்டில் மிகவும் மோசமான பேரிடர் நிகழ்ந்துள்ளது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காங்கிரஸ் சார்பில் 100 வீடுகள் கட்டித் தரப்படும் என கூறினார் ராகுல் காந்தி.
இதற்கிடையே நேற்று நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், இன்னும் கூட முழுமையாக சரியாகாத பகுதிகளுக்கு ராகுல் காந்தி தனது சகோதரி பிரியங்காவுடன் விஜயம் செய்தார். மீட்புப் படையினர் மட்டுமே புழங்கும் பகுதியிலும், கன மழை பெய்த போதும் கூட, பாதுகாப்பில்லை என்று அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்த நிலையிலும் கூட அதைப் பொருட்படுத்தாமல், தனக்கு 2 முறை வாக்களித்த மக்கள் துயரில் இருக்கும் நிலையை நேரில் கண்டு அவர்களுக்கு ஆறுதல் கூற ராகுல் காந்தி வந்தது அந்தப் பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.