வயநாடு நிலச்சரிவு.. 4வது நாள் மீட்புப் பணியின் போது 4 பேர் உயிருடன் மீட்பு
திருவனந்தபுரம்: வயநாடு நிலச்சரிவில் 4வது நாள் மீட்புப் பணியின் போது 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 29ம் தேதி சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி, அட்டமலை உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை உயிரிழந்தோர் 318 பேர் ஆகும். காணாமல் போன 1000க்கும் மேற்பட்டவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதுவரை காயங்களுடன் மீட்கப்பட்ட 200க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3500 பேர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. 4வது நாளாக மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.வயநாடு நிலச்சரிவில் சிக்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் 4 நாட்களுக்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். சூரல்மலையில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமம் படவெட்டிகன்னு. இந்த கிராமமும் நிலச்சரிவில் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த கிராமத்தை சேர்ந்த ஜானி என்பவர் வீட்டிலேயே இருந்துள்ளார்.
நிலச்சரிவின் போது ஜானி மலை உச்சிக்கு சென்றிருந்ததாக தகவல் வெளியான நிலையில், ஜானி குடும்பத்தை காணவில்லை என்று அருகில் இருந்தவர் கூறியுள்ளனர். அதன் பேரில் மீட்பு குழுவினரும் ஜானியை தேடியுள்ளனர். தற்போது 4 நாட்கள் கழித்து ஜானி மற்றும் அவரது குடும்பத்தினர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். ஜானி வீட்டில் 2 ஆண்களும். ஒரு பெண் மற்றும் ஒரு சிறுமியும் இருந்துள்ளனர். இவர்களை மீட்ட மீட்பு குழுவினர் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அதே வேளையில் சிறுமியின் காலில் மட்டும் காயம் ஏற்பட்டிருந்த நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நிலச்சரிவில் சிக்கி 4 நாட்களுக்கு பின்னர் ஜானியின் குடும்பத்தினர் மீட்கப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.