மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயப் பணிகளுக்காக.. வைகை அணையிலிருந்து தண்ணீர் திறப்பு!

Meenakshi
Jul 03, 2024,05:37 PM IST

ஆண்டிபட்டி: வைகை அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்காக வினாடிக்கு 900 கன அடி தண்ணீர் இன்று திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே வைகை அணை உள்ளது. இந்த அணையில் இருந்து மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய  5 மாவட்ட மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. இந்த 5 மாவட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. ஒவ்வொரு ஆண்டுமு் ஜூன் மாதம் முதல் வாரத்தில் முதல் போக பாசனத்திற்கும், அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் 2ம் போக பாசனத்திற்கும் நீர் திறந்து விடப்படுவது வழக்கம்.




அப்படி தான் இந்தாண்டிற்கான நீர் தற்போது திறந்து விடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தொடக்கம் முதலே நீர்வரத்து குறைவாக இருந்து வருகிறது. இருந்த போதும் மதுரை, திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று  வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அரசு உத்தரவின் பேரில் இன்று காலையில் வைகை அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டது. 71 அடி கொள்ளவு உள்ள வைகை அணையில் நீர்மட்டம் தற்போது 51.71 அடியாக உள்ளது.45 நாட்களுக்கு 900 கன அடி வீதம் முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறை வைத்தும் மொத்தம் 120 நாட்களுக்கு 6739 மி.கன அடி தண்ணீர் வைகை அணையில் இருந்து திறக்கப்படுகிறது.


இந்த தண்ணீரை மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் பொதுப்பணி துறை அதிகாரிகள் முன்னிலையில் திறந்து வைத்தனர். அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டவுடன் விவசாயிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த தண்ணீர் மூலம் குறுகிய காலப்பயிர்களை நடவு செய்தும், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு விவசாயிகளுக்கு 3 மாவட்ட கலெக்டர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த தண்ணீரினால் திண்டுக்கல் மாவட்ட நிலக்கோட்டை வட்டத்துக்குட்பட்ட 1797 ஏக்கர், மதுரை மாவட்ட வாடிப்பட்டி வட்டத்துக்குட்பட்ட 16,452 ஏக்கர் வடக்கு வட்டத்துக்குட்ட 26,792 ஏக்கர் என இரு மாவட்டங்களிலும் உள்ள 45,041 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.