தண்ணீர் திறப்பை குறைத்த கர்நாடகா.. மேட்டூர் அணை நீர்மட்டம்.. 100 அடியை எட்டுமா.. நீர் வரத்து குறைவு
சேலம்: காவிரி குழு மேலாண்மை கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 60, 771 கன அடியாக குறைந்துள்ளது.
கர்நாடக மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக மழை நீடித்து வருகிறது. குறிப்பாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் அணைக்கு வரும் நீர் வரத்து அதிகரித்து, அணையின் நீர்மட்டமும் அதிகரித்து வருகிறது. இதனால் கபினி மற்றும் கிருஷ்ண சாகர் அணையில் இருந்து 80 கனஅடி வரை நீர் திறக்கப்பட்டு வந்தது. இதனால் காவிரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீரால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் கடந்த ஒரு வாரமாக நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வந்தது.
இந்த நிலையில், கபினி மற்றும் கிருஷ்ண சாகர் அணையில் இருந்து 80,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 21,000 கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது. இதனால் காவிரியிலிருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் குறைந்துள்ளது. அதாவது மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 79,682ல் இருந்து 60, 771 கன அடியாக குறைந்துள்ளது. இன்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற உள்ள நிலையில் நீர் திறப்பு குறித்து என்னென்ன முடிவுகள் மேற்கொள்ளப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே காவிரியில் தமிழகத்திற்கான தண்ணீரை விரைந்து பெற்று தர வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தும் வருகின்றனர். ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 4.85 அடி அளவிற்கு உயர்ந்து,தற்போது அணை நீர்மட்டம் 86.85 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 49.12 டிஎம்சி ஆக உள்ளது.