எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில்..மக்களவையில் நிறைவேறியது.. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா
டெல்லி: கடும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், 288 உறுப்பினர்களின் ஆதரவுடன், வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது.
நாடு முழுவதும் வக்பு சொத்துக்களை சீர்படுத்துவதற்காக வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது. ஆனால் இந்த வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா முஸ்லிம்களுக்கு எதிரானது என எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளை முன்வைத்தனர். இருப்பினும் 23 சட்டத் திருத்தங்களுடன் அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு கடந்த 13ஆம் தேதி லோக்சபா ராஜ்யசபா என்ற இரண்டு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது. இதில் 14 திருத்தங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ஆனால் எதிர்க்கட்சியினர் இந்த சட்ட திருத்த மசோதாவை கைவிட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். குறிப்பாக தமிழ்நாட்டில் இச்சட்ட திருத்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்புகள் நிலவி வந்தது.
இதற்காக தமிழக சட்டபேரவையில்
வக்பு சட்டத்திருத்த மசோதாவை கைவிட வேண்டும் என வலியுறுத்தி தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதனை முதல்வர் மு.க ஸ்டாலின் முன்மொழிந்தார். தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் தீர்மானத்துக்கு மீதான தங்கள் நிலைப்பாடு எடுத்துரைத்த பின்னர் வாக்கெடுப்பின் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நிறைவேற்றத்திற்கு மக்களவையில் நேற்று நள்ளிரவு 12 மணி நேரத்திற்கும் மேலாக காரசார விவாதம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவாக 288 உறுப்பினர்களும், எதிராக 232 பேரும் வாக்களித்தனர். கடும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பெரும்பான்மை அடிப்படையில் 288 உறுப்பினர்களின் ஆதரவுடன் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், வக்பு வாரிய சொத்துக்களை ஒன்றிய அரசு அபகரிக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
லோக்சபாவில் சட்ட திருத்தம் மசோதா நிறைவேறியதை தொடர்ந்து, அடுத்து ராஜ்யசபாவில் இந்த மசோதா கொண்டுவரப்பட்டு அங்கும் நிறைவேற்றப்படும். அதன் பிறகு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு பின்னர் இது சட்டமாகும்.