உலகின் மிக முக்கிய வெளிநாட்டு அரசியல் கட்சி பாஜக.. வால் ஸ்ட்ரீட் பத்திரிகை புகழாரம்!
Mar 22, 2023,04:51 PM IST
டெல்லி: உலகிலேயே மிகவும் முக்கியமான வெளிநாட்டு கட்சியாக பாஜக திகழ்வதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இதழ் புகழாரம் சூட்டியுள்ளது. இதுதொடர்பாக அந்த இதழில் வால்டர் ரஸ்ஸல் மீட் என்பவர் ஒரு கட்டுரையை எழுதியுள்ளார்.
அதேசமயம், உலகிலேயே அதிகம் புரிந்து கொள்ள முடியாத கட்சியாகவும் பாஜக திகழ்வதாகவும் அவர் கூறியுள்ளார். அமெரிக்கர்களின் பார்வையில் உலகிலேயே மிகவும் முக்கியமான வெளிநாட்டுக் கட்சி எது என்றால் அது பாஜகவாகவே உள்ளது என்பது வால்டரின் கருத்தாகும்.
2014ம் ஆண்டுக்கு முன்பு வரை பாஜகவின் தாக்கம் இந்தியாவில் அதிகம் இருந்ததில்லை. 2014க்குப் பிறகு அந்தக் கட்சியின் தாக்கம் இல்லாத பகுதியே இந்தியாவில் இல்லை. ஏன் உலக அளவில் பாஜக மிகப் பெரிய அளவில் பிரபலமாகியுள்ளது. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் வென்று நரேந்திர மோடி முதல் முறையாக பிரதமர் ஆனார். 2019ம் ஆண்டும் பாஜகவே மிகப் பெரிய வெற்றியைப் பெற்று மீண்டும் மோடி பிரதமரானார். 2024ம் ஆண்டிலும் மீண்டும் வெற்றி பெறும் முனைப்புடன் பாஜக வெற்றி நடை போட்டு வருகிறது.
பாஜக தலைமையில் இந்தியா மிகப் பெரிய பொருளாதார சக்தியாக திகழ்ந்து வருகிறது. ஜப்பானுடன் இணைந்து அது உலகின் முக்கிய பொருளாதார கேந்திரமாக மாறியுள்ளது. இந்தியாவின் துணை இல்லாமல் அமெரிக்காவே கூட முக்கிய முடிவுகளை எடுக்க முடியாத நிலையை நோக்கி போய்க் கொண்டிருப்பதாகவும் வால்டர் கூறியுள்ளார். சீனாவை ஒடுக்க அமெரிக்காவுக்கு இந்தியாவின் துணை அவசியமாகியுள்ளது.
அதேசமயம், பாஜகவை அமெரிக்கர்களால் புரிந்து கொள்ள முடியாத நிலையும் உள்ளது. உலகிலேயே அதிகம் புரிந்து கொள்ளமுடியாத கட்சியாகவும் பாஜகவே திகழ்கிறது. பெரும்பாலான இந்தியர் அல்லாதவர்களுக்கு பாஜகவின் வளர்ச்சியும், அதன் அரசியலும் புரியவில்லை என்று அந்தக் கட்டுரையில் வால்டர் கூறியுள்ளார்.