"மாத்தி யோசி".. இப்படி செஞ்சா... ரஷ்யா உக்ரைன் போர் ஓயும்.. விவேக் ராமசாமி அதிரடி ஐடியா!

Su.tha Arivalagan
Aug 19, 2023,05:25 PM IST
வாஷிங்டன்: ரஷ்யா உக்ரைன் போரை நிறுத்தும் யோசனையை தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட ஆயத்தமாகி வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி, ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்தும் யோசனையையும் சொல்லியுள்ளார்.

இந்திய அமெரிக்கரான விவேக் ராமசாமி, அமெரிக்காவில் பிரபலமாகி வருகிறார். காரணம் இவரது பேச்சுக்கள் மற்ற தலைவர்களிடமிருந்து இவரை வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது. டிவிட்டர் உரிமையாளர் எலான் மஸ்க்கே கூட விவேக் ராமசாமியைப் பாராட்டியுள்ளார்.



குடியரசுக் கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட இவர் களம் இறங்கியுள்ளார். இவருக்கும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும் இடையில்தான் கடும் போட்டி நிலவுகிறது. இதில் வென்று வேட்பாளராக தேர்வானால் புதிய சாதனை படைப்பார் விவேக் ராமசாமி.

இந்த நிலையில் விவேக் ராமசாமி, சிஎன்என் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டி பரபரப்பாக பேசப்படுகிறது. அந்தப் பேட்டியில் ரஷ்யா - உக்ரைன் போர் குறித்தும், ரஷ்யா - சீன ராணுவ ஒப்பந்தம் குறித்தும் அவர் விரிவாகப் பேசியுள்ளார்.

விவேக் ராமசாமியின் பேட்டியிலிருந்து:

உக்ரைன் போரை நிறுத்துவது மிக மிக சுலபம். முதலில் ரஷ்யா - சீனா ராணுவ ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். இந்த ஒப்பந்தத்திலிருந்து  ரஷ்யாவை வெளியில் கொண்டு வர வேண்டும். இதற்காக ரஷ்யாவுடன் பேச வேண்டும். ரஷ்யாவை இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியே கொண்டு வருவது அமெரிக்காவுக்கு பெரிய வெற்றியாகும்.



நமது நோக்கம் ரஷ்யா தோற்க வேண்டும் என்பதல்ல.. மாறாக, அமெரிக்கா  வெற்றி பெற வேண்டும். அதைத்தான் நாம் மனதில் கொண்டு செயல்பட வேண்டும். 

ரஷ்யா - சீனா ராணுவ ஒப்பந்தமானது, அமெரிக்காவுக்கு எதிரானது, அபாயகரமானது. நான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் எனது முதல் பணி ரஷ்யாவுக்கு செல்வதாகவே இருக்கும். அதிபர் புடினை சந்தித்து பேசுவேன். சீனாவுடன் செய்து கொண்டுள்ள ராணுவ ஒப்பந்தத்திலிருந்து வெளியே வருமாறு அவரிடம் கேட்டுக் கொள்வேன், அதை அவர் செய்ய வைப்பேன்.

ஆனால் ஜோ பைடன் நிர்வாகம் அதற்கு தலைகீழாக செய்து கொண்டிருக்கிறது. ரஷ்யாவைக் கைவிடுமாறு சீனாவிடம் போய்க் கேட்டுக் கொண்டிருக்கிறது. அது தவறான அணுகுமுறையாகும். நாம் ரஷ்யாவைத் தான் அணுக வேண்டும். விலாடிமிர் புடினிடம்தான் நாம் பேச வேண்டும். 

1972ம் ஆண்டு எப்படி நிக்ஸன் சீனாவுக்குப் போனாரோ அதேபோல நான் புடினை சந்திப்பேன். புடின்தான் புதிய மாவோ. மாஸ்கோவுக்குச் செல்வேன், நான் நினைத்ததை சாதிப்பேன்.



ரஷ்யாவும் சீனாவும் இணைந்த ராணுவக் கூட்டணியானது, மிகப் பலம் வாய்ந்தது மட்டுமல்லாமல் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாகும்.  ரஷ்யாவிடம் உள்ள அணு ஆயுத பலம், ஹைப்பர்சானிக் ஏவுகணைகள் அமெரிக்கா, சீனாவிடம் உள்ளதை விட பலம் வாய்ந்தவை, அபாயகரமானவை.  அதேபோ சீனாவின் கடற்படை பலம் நம்மை விட வலுவானது.  சீனா- ரஷ்யாவின் கூட்டுப் பொருளாதாரம் மிக வலிமையானது. 

இப்படி இருக்கையில் நாம் உக்ரைனுடன் மேலும் மேலும் நெருங்கிச் செயல்படுவதும், உதவிகள் செய்வதும் கூட சீனாவை நோக்கி  ரஷ்யாவை வேகமாக நகர்த்திச் செல்கிறது. இது அமெரிக்காவுக்கு ஆபத்தானதாகும். எனவேதான் சொல்கிறேன்.. நமது நோக்கம் புடின் தோற்க வேண்டும் என்று இருக்கக் கூடாது.. மாறாக அமெரிக்கா வெல்ல வேண்டும் என்றுதான் இருக்க வேண்டும்.

எனது ரஷ்யா கொள்கை மிகத்  தெளிவானது -  ரஷ்யா சீனா கூட்டணி பலமிழக்க வேண்டும். இதற்காக சில நீக்குப் போக்குகளை நாம் கடைப்பிடித்தாக வேண்டும். ரஷ்யா கைப்பற்றியுள்ள உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தை ரஷ்யாவே வைத்துக் கொள்ளட்டும்.  அதேபோல உக்ரைனை நேட்டோவில் சேர்க்க அமெரிக்கா முயலக் கூடாது. உக்ரைனை தள்ளியே வைத்திருப்போம். இது அமெரிக்காவுக்கு நல்லது. அமெரிக்காவின் நலனைக் கருத்தில் கொண்டு பார்த்தால் இது சரியே என்று தோன்றும் என்றார் விவேக் ராமசாமி.

விவேக் ராமசாமியின் இந்த பேட்டி மிகப் பெரிய அளவில் அமெரிக்காவில் பேசு பொருளாகியுள்ளது, விவாதத்திற்குள்ளாகியுள்ளது. அவரது கருத்துக்கள் ரஷ்யாவுக்கு ஆதரவாகவும்,  உக்ரைனுக்கு எதிராகவும் உள்ளதாக கருதப்படுகிறது. அதேசமயம், சீனாவை பெரிய ஆளாக கருதி அவர்களிடம் போய் நிற்கக் கூடாது என்ற அவரது கருத்தும் வெளிப்பட்டுள்ளது. விவேக் ராமசாமியின் கொள்கை இந்தியாவுக்கும் சாதகமாகவே இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதாவது ஒரே கல்லில் பல மாங்காய்களை குறி வைத்துப் பேசியுள்ளார் விவேக் ராமசாமி. இந்தப் பேச்சுக்கு எந்த அளவுக்கு பலன் கிடைக்கும் என்பது போகப் போகத் தெரியும்.

கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர் விவேக் ராமசாமி,1985ம் ஆண்டு சின்சினாட்டியில் பிறந்தவர். 37 வயதாகும் இவர் வேகமாக அமெரிக்கர்களிடையே ஹாட்டான நபராக உருவெடுத்து வருகிறார்.