தொண்டர்களைச் சந்திக்கிறார் நடிகர் விஷால்.. மீண்டும் தீவிர அரசியலா?

Su.tha Arivalagan
Oct 07, 2023,03:26 PM IST

சென்னை:  நடிகர் விஷால் தனது மக்கள் நல இயக்கத் தொண்டர்களை சந்திக்க தூத்துக்குடி செல்கிறார்.


கடந்த 2018ம் ஆண்டு தனது ரசிகர் மன்றங்களை சமூக நல இயக்கமாக மாற்றினார் நடிகர் விஷால். மக்கள் நல இயக்கம் என்ற பெயரில் அவரது மன்றங்கள் இயங்கி வருகின்றன.


நடிகர் விஷால் 2018ம் ஆண்டு அரசியலில் புகும் நோக்கில் செயல்பட்டு வந்தார். ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடவும் அவர் முயன்றார்.  ஆனால் அவரது வேட்பு மனு தள்ளுபடியாகி விட்டது.  அதன் பின்னர் அவர் நடிப்பில் கவனம் செலுத்தப் போவதாக கூறினார். அதேசமயம், தனது ரசிகர் மன்றங்களை அதே ஆண்டில் மக்கள் நல இயக்கமாக மாற்றினார் விஷால்.




இது அவரது தனிக் கட்சியாக மாறுமா என்ற விவாதமும் அப்போது எழுந்தது. ஆனால் எந்த வேகத்தில் எழுந்தாரோ அதே வேகத்தில் வேகம் குறைந்து போனது விஷாலின் இயக்கம். இந்த நிலையில் தற்போது மீண்டும் தனது அமைப்பினரை சந்திக்க கிளம்புகிறார் விஷால்.


தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்ட பொறுப்பாளர்கள்,  நகரம், ஒன்றியம், பகுதி பொறுப்பாளர்கள் மற்றும் மக்கள் நல இயக்கத்தின் உறுப்பினர்களை தூத்துக்குடியில் வைத்து அக்டோபர் 8ம் தேதி சந்திக்கவுள்ளார் விஷால்.


தூத்துக்குடி வேம்பார் பகுதியில் உள்ள கே. காமராஜர் அரங்கத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. இந்த சந்திப்பு எதற்காக என்று தெரியவில்லை. மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடும் எண்ணத்தில் விஷால் இருக்கிறாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.


இந்த சந்திப்புக்கு வருவோர், விஷாலுக்கு சால்வை, மாலை போன்ற எந்த பரிசு பொருட்களையும் கொண்டுவர வேண்டாம் அதற்காக ஆகும் செலவை ஏழை, எளிய பொதுமக்களுக்கு உதவும்படி  கேட்டுக் கொள்வதாக மக்கள் நல இயக்க செயலாளர் வி.ஹரிகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.