அரசியலுக்கு வரப் போறாரா விஷால்.. போற இடமெல்லாம் ஏதாச்சும் பண்ணிட்டிருக்காரே!
Nov 15, 2023,04:59 PM IST
சென்னை: நடிகர் விஷால் வர வர வித்தியாசமாக செயல்பட ஆரம்பித்திருக்கிறார். இதையெல்லாம் பார்க்கும்போது அவருக்கு சமூக சேவை அல்லது அரசியலில் ஈடுபடும் ஆர்வம் பிறந்திருக்கிறதா என்ற கேள்வியை பலரும் எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.
நடிகர் விஷால் நடிகர் சங்கம் மூலமாக நலிவடைந்த கலைஞர்களுக்கு நிறைய செய்து வருகிறார். முன்பு அரசியல் ஆசையுடனும் இருந்தார். பின்னர் அதிலிருந்து விலகியிருந்தார். ஆனால் சமீப காலமாக அவரது செயல்பாடுகள் கவனம் ஈர்த்து வருகின்றன.
சமீப காலமாக பொது நிகழ்ச்சிகளில் சாப்பிடும்போது முதலில் இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ முறைப்படி வணங்குகிறார். சில விநாடிகள் இது நீடிக்கிறது. இது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. அதேபோல படப்பிடிப்புக்காக போகும் பகுதிகளில் மக்களை சந்திக்கிறார். குறை கேட்கிறார். உதவிகள் செய்கிறார்.
இப்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் அதிரடி கலந்த திரில்லர் திரைப்படம் தான் விஷால் 34. இப்படத்தினை தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கார்த்திக் சுப்பாராஜின் 'ஸ்டோன் பெஞ்ச்' தயாரிப்பு நிறுவனத்தோடு ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.
நடிகர் விஷால் இயக்குநர் ஹரியுடன் 3வது முறையாக இணைகிறார். இதற்கு முன்னதாக தாமிரபரணி, பூஜை படங்களில் இணைந்து செயல்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் மாதம் இப்படத்திற்கு பூஜை போடப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூலை 15ம் தேதி துவங்கியது. இப்படத்தில் பிரியா பவானிசங்கர் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.
திருச்சியில் நடைபெற்று வரும் விஷால் 34 படப்பிடிப்பில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் நடிகர் விஷாலை சந்தித்துள்ளனர். விவசாயிகளின் பிரச்சனைகள் மற்றும் அவர்களின் நலன் குறித்தும் கேட்டறிந்தார்.
அப்போது குறை கூற வந்தவர்களிடன் சாப்பிட்டங்களா அம்மா என்று விசாரித்தார். அப்போது அந்த பெண் இல்லை என்று கூற முதலில் சாப்பிடுங்கள் என்று அக்கறையுடன் கூறினார். அதேபோன்று படப்பிடிப்பின் போது அப்பகுதியில் உள்ள மக்களின் நலன் குறித்தும் அவர்களின் பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்து அவர்களுக்கு உதவிகள் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார் விஷால்.