"கேப்டன்" இப்படிக் கஷ்டப்படறாரே.. வேதனையிலேயே உயிரை விட்ட "விருத்தகிரி" வசனகர்த்தா!

Su.tha Arivalagan
Dec 07, 2023,05:46 PM IST

- மஞ்சுளா தேவி


கடலூர்: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது குறித்து வருத்தமும், வேதனையும் அடைந்த திரைப்பட வசனகர்த்தா வேலுமணி மாரடைப்பால் மரணமடைந்தது பலரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.


விஜயகாந்த் நடித்த தேவன், எங்கள் ஆசான், விருத்தகிரி உள்ளிட்ட ல  படங்களுக்கு வசனம் எழுதியவர் வேலுமணி.  55 வயதான வேலுமணி கடலூரைச் சேர்ந்தவர். 30 வருடத்திற்கு முன்பு சினிமாவுக்கு வந்தார். ஆரம்பத்தில் கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக இருந்தார். பின்னர் பூவெல்லாம் கேட்டுப்பார், ரிதம்  ஆகிய படங்களில் இயக்குநர் வசந்த்திடம் உதவியாளராக இருந்தார்.




தேவன் படத்தில் முதன் முதலாக வசனம் எழுதினார். அதில் வந்த வசனங்கள் விஜயகாந்த்துக்குப் பிடித்துப் போகவே, தான் நடித்த எங்கள் ஆசான், விருத்தகிரி போன்ற படங்களுக்கும் வேலுமணியையே வசனகர்த்தாவாக நியமித்தார். மேலும் அரசியல் குறித்தும் வேலுமணியிடம் விஜயகாந்த் கலந்து ஆலோசிப்பாராம். அவர் மீது பாசத்துடன் இருந்துள்ளார். விஜயகாந்த் மீது வேலுமணியும் அன்பாகவும், அக்கறை கொண்டவராகவும் இருந்துள்ளார்.


சமீபத்தில் விஜயகாந்தின் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் போது வசனகர்த்தா வேலுமணி நேரில் சென்று  நலம் விசாரித்து இருக்கிறார். இந்நிலையில் விஜயகாந்த் உடல் நலனில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானதைக் கேட்டு வேதனை அடைந்துள்ளார். அந்த வேதனையில் இருந்து வந்த அவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார்.


விஜயகாந்த்துக்கு நெருக்கமான வசனகர்த்தா வேலுமணியின் மறைவு தேமுதிகவினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.