"விராட் கோலி.. You beauty".. பறந்த முத்தங்கள்.. குதூகலித்த அனுஷ்கா சர்மா.. வாவ் போட்ட ரசிகர்கள்!
மும்பை: ஒவ்வொரு உறவிலும்.. பரிமளிக்கும் அன்பும், பாசப் பிணைப்பும்.. உனக்கு நான் இருக்கேன்.. நீ கலக்கு என்று கொடுக்கும் அந்த பலமும் இருந்தால்.. எல்லா சாதனையும் நம் வசமாகும்.. அப்படியான நேசப் பிணைப்பைத்தான் இன்று மும்பை வாங்கடே மைதானத்தில் அத்தனை பேரும் பார்த்தார்கள்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக விராட் கோலி இருந்தபோது பல சாதனைகளைப் படைத்தார்.. கூடவே பல சர்ச்சைகளையும் சந்தித்தார். அதில் பெரிய சர்ச்சை எது என்றால், நடிகை அனுஷ்கா சர்மாவை கல்யாணம் செய்த பிறகு விராட் கோலி சரியாக ஆடுவதில்லை. கேப்டன்சியில் கவனம் செலுத்துவதில்லை.. கவனம் சிதறி விட்டது என்பதுதான்.
குறிப்பாக இங்கிலாந்து தொடரின்போது மிகப் பெரிய தோல்வியை இந்தியா சந்தித்தது. டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது. இதற்குக் காரணம் என்று அனுஷ்காவை நோக்கி விமர்சகர்கள் கை உயர்த்தியபோது விராட் கோலி நொந்தே போய் விட்டார். அனுஷ்காவும் கூட மனம் உடைந்து போனார்.
ஆனால் விராட் கோலி முற்றிலுமாக வீழ்ந்து போய் விடவில்லை.. அனுஷ்காவும் அவரை வீழ்ந்து போக அனுமதிக்கவில்லை. விமர்சகர்களின் வாயை அடைக்கும் வகையில் பல அதிரடிகளைக் காட்டினார் விராட் கோலி. அதிலும் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்ட பின்னர் விராட் கோலியின் எழுச்சி அனைவரையும் அதிர வைத்து வருகிறது.
சொல்லிச் சொல்லி அடித்துக் கொண்டிருக்கிறார் விராட் கோலி. பல சாதனைகளை ஜஸ்ட் லைக் தட் முறியடித்துக் கொண்டு போய்க் கொண்டிருக்கிறார். நிதானத்தோடு, அதேசமயம், அதி வேக வெறியோடு அவர் படைக்கும் ஒவ்வொரு சாதனையையும் அனுஷ்கா அமைதியாக அதேசமயம், பெருமிதத்தோடு பார்த்துப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார்.
இவர்கள் இருவரையும் நோக்கி நீண்ட விரல்களும், குரல்களும் இன்று சத்தமிழந்து, சத்திழந்து போய் விட்டன. நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் பிரமாதப்படுத்தி வருகிறார் விராட் கோலி. மகா சாதனைகளை நிகழ்த்தி அசத்திக் கொண்டிருக்கும் விராட் கோலி இன்று "கிரிக்கெட் கடவுள்" சச்சின் டெண்டுல்கரின் சத சாதனையை முறியடித்து பிரமிக்க வைத்து விட்டார்.
ஒரு நாள் போட்டிகளில் 50 சதங்களைத் தொட்டு சச்சின் சாதனையை முறியடித்தபோது மைதானமே அதிர்ந்தது. அந்த நேரத்தில் கோலி செய்தது இரண்டே இரண்டு செயல்கள்தான்.. முதலில் தலை குனிந்து "கடவுளை" நோக்கி வணங்கினார்.. அடுத்து தனது காதல் மனைவியை நோக்கி பறக்கும் முத்தங்களை படிப்படியாக அனுப்பி மகிழ்ந்தார்.
மறுமுனையில் ஒட்டுமொத்த உற்சாகத்தின் குவியலாக காணப்பட்டார் அனுஷ்கா.. நீ ஜெயிச்சுட்டே.. சாதிச்சுட்டே.. என்ற பெருமிதத்தை அவரது முகமும், புன்னகையும், வாய் நிறைய வழிந்தோடிய சிரிப்பும் எடுத்துக் காட்டியது.. மொத்த களங்கத்தையும் துடைத்த பெருமையும், உற்சாகமும் இருவரின் முகங்களிலும் நிறைந்து கிடந்தது.
இணைகள் எப்போதுமே.. பரஸ்பரம் அன்பு, ஆதரவு, நேசத்துடன்தான் இயங்கும்.. உன் வெற்றிக்கு உரமாக நான் இருக்கேன்.. என்னுடன் நீ இரு என்பதுதான் அன்பின் ஆதாரமே.. அந்த ஆதாரத்தைத்தான் இன்று விராட் கோலியும் சரி, அனுஷ்காவும் சரி உதாரணமாக காட்டியுள்ளனர். இருவருமே ஏகப்பட்ட சவால்களைச் சந்தித்துத்தான் இன்று இந்த இடத்தை அடைந்து நிற்கின்றனர்.
இருவரும் காதலின் அற்புதமான சின்னம் மட்டுமல்ல.. அழகான வாழ்க்கையின் அடையாளமும் கூட.. இவர்களுக்காக கண்டிப்பாக இந்தியா கப் அடிக்க வேண்டும்!