தேர்தல் விதிமுறை மீறி பிறந்த நாள் கொண்டாட்டம்.. பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்கு பதிவு

Meenakshi
Mar 19, 2024,05:31 PM IST

சென்னை: தேர்தல் விதிமுறைகளை மீறியதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


சென்னையில் உள்ள தேமுதிக அலுவலகத்தில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் இலவச தையல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டதற்கான சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சுமார் 300க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட நிலையில் அவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.




முன்னதாக, இந்நிகழ்ச்சி நடத்த அனுமதி கேட்டு காவல் நிலையத்தில் தேமுதிக சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால், தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால், தேமுதிகவினர் விழா நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும் அனுமதி பெறாமல் விழா நடந்துள்ளது. இவ்விழா நடந்ததை அறிந்த கோயம்பேடு பஸ் நிலைய காவல் நிலைய போலீஸார் அங்கு சென்று அனுமதி இன்றி எவ்வாறு நீங்கள் விழா நடத்தலாம் என்று கேட்டுள்ளனர். அதற்கு தேமுதிகவினர் எங்கள் அலுவகத்தில் தான் விழா நடக்கிறது  என்று கூறி வாக்குவதாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.


திருவாரூரில்.. மார்ச் 23..முதல்வர் ஸ்டாலின்.. திருச்சியில் 24ம் தேதி எடப்பாடி பழனிச்சாமி..பிரச்சாரம்



இந்த பிரச்சனையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. விதிமுறைகளை மீறி நிகழ்ச்சி நடத்தியதாக கூறி  போலீசார், விழாவை தலைமை தாங்கிய பிரேமலதா விஜயகாந்த் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மாவட்ட தேர்தல் அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் சிஎம்பிடி காவல் நிலையத்தினர்  3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.