இதோ பாருங்க.. நிலாவில் இறங்கிய நம்ம புதிய ஹீரோ!
Aug 31, 2023,12:29 PM IST
திருப்பூர்: விநாயகர் சதுர்த்தி விழா களை கட்டியுள்ளது. இப்போதைய டிரென்டிங் சந்திரயானும், நிலாவும்தானே.. ஸோ.. விநாயகரையும் நிலாவுக்குக் கொண்டு போய் விட்டனர் நம்மாட்கள்.
சந்திராயன்- 3 கடந்த ஆகஸ்ட் 23 நிலாவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. இந்த வெற்றியை நாடே கொண்டாடி மகிழ்ந்தது. இந்த நிலையில் இந்த வெற்றியை வைத்து விநாயகர் சிலைகளை செய்ய ஆரம்பித்து விட்டனர் நம்மவர்கள்.
விநாயகர் சதுர்த்தி வருகிற செப்டம்பர் 19ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
முன்பு வீட்டிலேயே கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தி விழா இப்போது வீட்டில் மட்டும் இன்றி நகரம், கிராமம் ,குக்கிராமம் என்ற வித்தியாசம் இல்லாமல் எல்லா பொது இடங்களிலும் விநாயகர் சிலையை வைத்து அதனை ஊர்வலமாக எடுத்துச் சென்று விநாயகர் சதுர்த்தி விழாவினை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் விதவிதமான வித்தியாசமான விநாயகர் சிலை தயாரிப்பில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஒவ்வொரு விநாயகர் சதுர்த்திக்கும் ஒரு வினோத வடிவம் உள்ள விநாயகர் சிலை தயாரிக்கப்பட்டு வருகின்றனர். உதாரணமாக கார்கில் போர் நடைபெற்று நாம் வென்ற நிலையில் அதன் நினைவாக கார்கில் வீரர் போன்றும், பீரங்கியில் விநாயகர் அமர்ந்திருப்பது போலவும், விநாயகர் துப்பாக்கியை பிடித்து சுடுவது போன்றும் விசித்திரமான உருவத்தில் மிகவும் நேர்த்தியாக விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டன.
அதுமட்டுமல்லாமல் கொரோனா பரவலின் காரணமாக இரண்டு ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தப்படவில்லை. பிறகு கொரோனா முடிந்த நிலையில் கொரோனாவை வென்ற வீரர் போன்றும், விநாயகரே ஊசி போடும் டாக்டர் போன்றும் சிலைகள் தயாரிக்கப்பட்டது.
இப்படியாக ஒவ்வொரு கால கட்டத்திலும் இந்தியாவில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை நினைவு கூறும் விதமாக விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு பொது இடங்களில் அச்சிலைகள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. இந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் ஒவ்வொரு வருடமும் வினோத விநாயகர் சிலை தயாரிப்பில் தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர்.
அந்த வரிசையில் ஹீரோ விநாயகர் நிலவில் அமர்ந்திருப்பது போன்ற சிலை உருவாகியுள்ளது. உலக நாடுகளிலேயே இந்தியா தான் முதலில் சந்திரயான் -3யை நிலவின் தென் துருவத்தில் தரை இறக்கிய பெருமைக்குரியது. அப்படிப்பட்ட சாதனையை நினைவு கூறும் வகையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சந்திரனில் விநாயகர் அமைந்த நிலையில் இருப்பது போன்ற சிலை தயாரித்துள்ளனர். இந்த செய்தியை அறிந்த மக்கள் பலரும் இதனை பார்ப்பதற்கு ஆர்வமுடன் உள்ளனர்.