விநாயகருக்கு பூஜித்த லட்டு.. ஆத்தாடி ஒன்றரை லட்சமா.. வியப்பில் ஆழ்ந்த உசிலம்பட்டி மக்கள்!

Manjula Devi
Sep 10, 2024,04:22 PM IST

மதுரை:   உசிலம்பட்டி அருகே உள்ள கிராமத்தில் விநாயகருக்கு படைத்த ஒரு லட்டு, ஒரு லட்சத்து 51ஆயிரத்துக்கு ஏலம் விடப்பட்ட சம்பவம் அனைவரையும் வாயை பிளக்க வைத்துள்ளது.


சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தி இந்தியா முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அப்போது வீதி எங்கும் வண்ணமயமான வித்தியாசமான தோற்றத்துடன் காணப்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து மக்கள் வழிபட்டு வந்தனர்‌.  இதனை தொடர்ந்து மூன்றாம் நாள் மேளதாளங்கள் முழங்க விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கப்பட்டது.




இதற்கிடையே வழிபாட்டில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு பழம் கொழுக்கட்டை சுண்டல் லட்டு பொறி கடலை போன்றவை படைத்து வழிபட்ட வந்தனர். அந்த வரிசையில் மதுரை உசிலம்பட்டி அருகே உள்ள மலைப்பட்டி கிராமத்தில் விநாயகர் சிலை வைத்து பூஜிக்கப்பட்டது. அப்போது விநாயகருக்கு நெய்வேத்தியம் வைப்பதற்கு பதிலாக விநாயகரின் கைகளிலேயே லட்டு வைக்கப்பட்டு பூஜை புனஸ்காரங்கள் செய்யப்பட்டது. இதனை அடுத்து சிலையை கரைப்பதற்கு முன்பு விநாயகர் கையில் உள்ள லட்டு ஏலம் விடப்பட்டது. 


அந்த லட்டு நமக்கு கிடைத்தால் விநாயகரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என மக்கள் நான் நீ என முந்திக்கொண்டு ஏலத்தொகையை கூறி வந்தனர்.  இறுதியாக  இந்த  லட்டுவை  மூக்கன் என்பவர் 1.51 லட்சத்திற்கு ஏலம் எடுத்துள்ளார். இந்த வருடம் லட்டுவை ஏலம் எடுத்த மூக்கனு அடுத்த வருடம் ஏலத்தொகை கட்டும் போது, அவருக்கு ஒரு பவுன் தங்க மோதிரம், பத்து வேட்டி சட்டை, ஐந்து சேலைகள் பரிசாக வழங்கப்படும் என கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.


இச்செய்தி தற்போது பட்டி தொட்டி எங்கும் பரவி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. விநாயகர் கொழுக்கட்டைக்குத்தான் பேமஸானவர்.. இப்போது லட்டுக்கும் பெயர் போனவராக மாறி விட்டார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்