மெரீனா சம்பவம் எதிரொலி.. தவெக மாநாட்டுக்கு கிடுக்கிப்பிடி.. விழுப்புரம் ஆலோசனையில் நடந்தது என்ன?

Meenakshi
Oct 10, 2024,03:57 PM IST

சென்னை:  தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கான பாதுகாப்பு குறித்து ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்த கூட்டத்தின்போது தவெக மாாநட்டுக்கான ஏற்பாடுகள், நிபந்தனைகள் சரிவர கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்பது குறித்த விவரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


விழுப்புரம், விக்கிரவாண்டியில் வரும் அக்டோபர் 27ம் தேதி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இதனை அக்கட்சி தலைவர் விஜய் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிகார பூர்வமாக அறிவித்தார். இதற்கு விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. காவல்துறையினர் வழங்கிய 33 நிபந்தனைகளில் 17 நிபந்தனைகளைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.




இந்த நிலையில் தான் சென்னை மெரீனா கடற்கரையில் நடந்த விமானப்படை வான்வெளி சாகச நிகழ்ச்சியைப் பார்த்து விட்டுத் திரும்பிய 5 பேர் பல்வேறு காரணங்களினால் உயிரிழந்த சம்பவம் நடந்து அனைவரையும் பரபரப்பில் ஆழ்த்தியது. பல லட்சம் பேர் கூடிய நிலையில் கடும் வெயில் காரணமாக இந்த 5 பேரும் உயிரிழந்ததாக அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதேசமயம், பெருமளவில் மக்கள் கூடும் இடங்களில் மிகுந்த முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.


இந்தப் பின்னணியில்தான் விழுப்புரத்தில் தவெக நிர்வாகிகளுடன் ஐஜி அஸ்ரா கார்க் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நிபந்தனைகள் சரியாக கடைப்பிடிக்கப்படுகின்றனவா, அதுதொடர்பான ப்ளூ பிரின்ட், மாநாட்டிற்கு எந்த எந்த பகுதிகளில் இருந்து எவ்வளவு பேர் வருவார்கள், மாநாடு பணிகள் எப்போது நிறைவு பெறு, காவல்துறையினர்கள் எப்போது ஆய்விற்கு உட்படுத்தலாம் என்பது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.


இதில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தவெக தரப்பில் பங்கேற்றார். மாநாட்டிற்கான பார்க்கிங் வசதிக்கு கூடுதல் இடம் ஒதுக்க வேண்டும் என்றும் அப்போது அறிவுறுத்தப்பட்டதாக தெரிகிறது. மேலும், ஆம்புலன்ஸ் வசதி, மருத்துவ வசதி, முக்கிய பிரமுகர்கள் வரும் வழியில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.


மாநாடு நடைபெறப் போகும் இடத்தில் விவசாயக் கிணறுகள் உள்ளன. உரிய பாதுகாப்புச் சுவர் இல்லாமல் இந்த கிணறுகள் உள்ளன. எனவே அவற்றை மூடி முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் காவல்துறை தரப்பில் தவெக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டதாம். மாநாட்டு பகுதிகளில் குறைந்த அளவில் பேனர்கள், வளைவுகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


இந்த ஆலோசனையின்போது சில நிபந்தனைகளுக்கு மட்டும் தளர்வு தறுமாறு தவெக சார்பில் கோரப்பட்டதாகவும் ஒரு தகவல் கூறுகிறது. ஆனால் காவல்துறை தரப்பில் என்ன பதில் தரப்பட்டது என்பது தெரியவில்லை.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்