"நான் மலரோடு தனியாக ஏன் இங்கு  வந்தேன்"..  டிஎம்எஸ்ஸே புல்லரித்து ரசிப்பார்.. இவர் பாடுவதைக் கேட்டால

Su.tha Arivalagan
Dec 21, 2023,04:45 PM IST

- மஞ்சுளா தேவி


சென்னை: நரைத்த முடி, இளைத்த தேகம்.. ஆனால் அந்தக் காலத்துல 6 பேக்ஸ் வைச்சிருப்பார் போல.. அழுக்கு படிந்த வேஷ்டி, கையில் மண்வெட்டி .. பார்ப்பதற்கு அப்படியே பக்கா கிராமத்து தாத்தா.. ஆனால் அவர் வாய் திறந்ததும்.. ச்சும்மா பிரமித்துப்  போய் விடுவீர்கள்!.


சுதி சுத்தமாக.. அட்டகாசமான சங்கதிகளோடு அந்தக் காலத்து காதல் பாட்டை அதே பாவத்தோடு பாடி அசத்துகிறார் இந்த கிராமத்து தாத்தா. வியர்வை வழிய உழைக்கும் கரங்களுக்குச் சொந்தக்காரரான இவர் வேலையின் அலுப்பு போக  பாட ஆரம்பித்தவர்.. இன்று அட்டகாசமாக பாடுகிறார்.


இன்றைய நவ நாகரிகத்தில் மனிதன் படிக்கிறான். அறிஞர் ஆகிறான். நல்ல வேலையில் அமர்கிறான். கை நிறைய சம்பாதிக்கிறான். தன் தேவைகளை பூர்த்தி செய்கிறான். வாழ்க்கை தொடர்கிறது. கடுமையாக உழைத்தால் மட்டுமே வாழ்வில் வெற்றி பெற்றவனாகிறான். எதற்காக உழைக்கிறோம்.. நாம் வயிற்று பிழைப்புக்காக, வாழ்வில் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்காக உழைப்பு தேவைப்படுகிறது .




உழைப்பு இல்லையேல்.. ஊதியம் இல்லை.. என்பது போல் உழைத்தால் மட்டுமே கையில் பணம் இருக்கும். ஓடிக் கொண்டே இருக்கிறோம்.. எதுவரை நாடி நரம்பு அடங்கும் வரை, நரை கூடி கிழப்பருவம் எய்தும் வரை.. உழைப்பு உழைப்பு என்று ஓடும் ஒவ்வொருவரையும் லேசாக்குவது அவர்களது எளிமையான மறுபக்கம்தான்.. அது அவர்களது பொழுதுபோக்குப் பக்கம்.


உழைப்பை காதலிக்கிறோம்.. கூடவே மனசையும் காதலிக்க வேண்டும்.. ஏதாவது ஒரு கலையை காதலித்தார்.. அது மனை லேசாக்கும்.. உடல் உழைப்பால் ஏற்படும் அசதியையும் அது போக்கும்.. அதைத்தான் இந்தத் தாத்தா சொல்லாமல் சொல்கிறார். ஆடி அடங்கப் போகும் பருவத்தில் இருந்தாலும் கூட அவர் தனது வேலையை ரசிப்பதோடு, ரசனையாகவும் பாடி அசத்துகிறார்.


தனது வாலிபக் காலத்தில் தான் பார்த்து ரசித்த.. உணர்ந்து ரசித்த காதலைப் பற்றி அவர் பாடுகிறார்.. அந்தக் காலத்தில் மட்டுமல்லாமல் இப்போது வரை பலராலும் ரசிக்கப்படும் பாட்டை அவர் பாடும்போது நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நிச்சயம் இசை என்றால் எத்தனை கிலோ என்றுதான் இவர் கேட்பார்.. ஆனால் அவர் பாடும் பாட்டில் எல்லா வார்த்தைகளிலும் இசை துள்ளி விளையாடுகிறது.


அதிலும் அவருடைய குரல் மிகவும் அருமையாக உள்ளது .இப்படி ஒருவர் மகிழ்ச்சியாக பாடுகிறார் என்றால் அவருடைய வாழ்க்கை எவ்வளவு இனிமையாக அமைந்திருக்கும் என்பது அவர் பாடும் பாடல்களில் தெரிகிறது. நிச்சயமாக வாழ்க்கையை ரசிக்க வேண்டும் என்பதை இந்த முன்னாள் வாலிபரின் மனசு சொல்கிறது.. நமக்கு பல பாடங்களைக் கற்றுக் கொடுக்கிறது.


இவர் தன் வாழ்க்கைத் துணையான தன் அருமை மனைவியைப் பற்றி பாடுகிறாரோ.. இல்லை உழைக்கும் போது களைப்பு தெரியாமல் இருப்பதற்காக பாடுகிறாரோ.. நமக்குத் தெரியாது.. ஆனால் வாழ்க்கையின் கஷ்டங்களை மறக்க இசையும் உங்களுக்கு ஒரு கருவி என்பதை அழகாக சுட்டிக் காட்டுகிறார்..  இது போல காதல் பரவசத்தை ஏற்படுத்தினால்  அந்த முதியவருக்கு ஒரு சல்யூட்  போடுவோம்!


கிராமத்து டிஎம்எஸ் பாடுவதைக் கேளுங்க!