அதிமுகவுடன் கூட்டணி இல்லை.. ஆனால் ஜெயலலிதா பேனருடன் ஓட்டுக் கேட்ட அன்புமணி ராமதாஸ்!

Su.tha Arivalagan
Jul 02, 2024,07:59 PM IST

விக்கிரவாண்டி:  பாஜக பாணியில் பாமகவும் இறங்கி விட்டது.  விக்கிரவாண்டி சட்டசபை இடைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது மறைந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா படத்துடன் கூடிய பேனரை பாமக பயன்படுத்தி வருகிறது.


கடந்த லோக்சபா தேர்தலின்போது தனது பிரச்சாரத்தின்போது மறைந்த எம்ஜிஆர் பெயரைப் பயன்படுத்தி வாக்கு சேகரித்திருந்தார் பிரதமர் மோடி. இது சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. காரணம், பாஜக கூட்டணியில் அதிமுக இடம் பெறவில்லை என்பதால். இந்த நிலையில் தற்போது இதே பாணியில் பாமகவும் இறங்கி விட்டது.


விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் திமுகவை எதிர்த்து முக்கியக் கட்சியாக பாமக போட்டியிடுகிறது. 3வது முக்கிய வேட்பாளராக நாம் தமிழர் கட்சி களத்தில் உள்ளது. இந்தத் தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை. நாங்கள் தேர்தலைப் புறக்கணிக்கிறோம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறி விட்டார். பாமக வேட்பாளருக்கு மறைமுகமாக ஆதரவு தரும் வகையில்தான் அதிமுக தேர்தலைப் புறக்கணித்திருப்பதாக திமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கூறி வருகிறார்கள். 


பாமக பிரச்சாரத்தில் ஜெயலலிதா பேனர்




இந்த நிலையில் விக்கிரவாண்டி தேர்தல் பிரச்சாரத்தில் ஜெயலலிதா படத்தை பாமக பயன்படுத்த ஆரம்பித்துள்ளது. டாக்டர் அன்புமணி ராமதாஸ் விக்கிரவாண்டியில் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தின்போது அவருடன் செளமியா அன்புமணி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் இருந்த பேனரில் ஜெயலலிதா படமும் பிரதானமாக இருந்தது. எப்படி என்றால் அவரது படத்துக்கு அடுத்துதான் பிரதமர் நரேந்திர மோடி படமே இடம் பெற்றிருந்தது.


பாமக பேனரில் ஜெயலலிதா படம் இடம் பெற்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவினரை தங்களது பக்கம் இழுக்க பாமக ஆர்வம் காட்டுவதையே இது வெளிப்படுத்தியுள்ளது. அது உண்மைதான் என்பதை டாக்டர் அன்புமணியின் பிரச்சார பேச்சும் உறுதிப்படுத்தியது. பிரச்சாரத்தின்போது டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசும்போது, இங்கு அதிமுக போட்டியிடலை.. நமக்கு எதிரி யாரு.. திமுக.. அவங்க பொது எதிரி இப்போ. பாமகவுக்கு ஓட்டுப் போடுங்க. நிச்சயமாக திமுகவை வீழ்த்த வேண்டும். அதற்கு எல்லோரும் ஒன்று சேர வேண்டும். 


தேமுதிகவும், அதிமுகவும் எங்க கூட வாங்க




தேமுதிகவாக இருந்தாலும் சரி, அதிமுகவா இருந்தாலும் சரி. உங்களுக்கு வாய்ப்பு கிடைச்சிருக்கு. பயன்படுத்தி நமக்கு பெரிய வெற்றியைத் தர வேண்டும். தலைவர்கள் எல்லாம் வரப் போறாங்க. அண்ணாமலை, ஓபிஎஸ் , டிடிவி தினகரன் எல்லோரும் வரப் போறாங்க. கிராம் கிராமமா வருவாங்க.


திமுக அரசில் எங்கு பார்த்ததாலும் வேதனைதான். கள்ளச்சாராயம், ஊழல், லஞ்சம் இப்படித்தான் இந்த ஆட்சி நடக்கிறது. நாம் யார்னு காமிக்கணும், பவர் என்னான்னு காமிக்கணும். 10ம் தேதி காலையில் எல்லாருமா சேர்ந்து மாம்பழச் சின்னத்துக்கு வாக்களிக்கணும். கோபத்தை அங்கு காட்டுங்க. (கோபமா இருக்கீங்களாம்மா என்று பெண்களைப் பார்த்து டாக்டர் அன்புமணி கேட்க, அவர்களும் ஆமாம் என்று கூறினர்).. அதான்.. அந்தக் கோபத்தை 10ம் தேதி காட்டுங்க. எனக்கும் கோபம் இருக்கு. ஆத்திரமும் இருக்கு என்று பேசினார் டாக்டர் அன்புமணி.


அதிமுக - தேமுதிக மெளனம்




அதிமுக தேர்தலைப் புறக்கணித்து விட்ட நிலையில், அதன் கூட்டணிக் கட்சியான தேமுதிகவும் தேர்தலில் போட்டியிடாத நிலையில், அந்தக் கட்சிகளின் வாக்குகளைப் பங்கு போட பாமக களத்தில் குதித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இந்த இரு கட்சிகளின் தலைமை என்ன  சொல்லப் போகிறது என்று தெரியவில்லை. 


தேர்தலைப் புறக்கணிப்பதாக மட்டுமே அதிமுக, தேமுதிக தலைமை அறிவித்துள்ளதே தவிர, வேறு யாருக்கும் வாக்களிக்காதீர்கள் என்று அழைப்பு விடுக்கவில்லை என்பது முக்கியமானது. ஆனால் தற்போது பாமக பகிரங்கமாக தங்களுக்கு வாக்களிக்குமாறு அதிமுக, தேமுதிகவினரை அழைத்துப் பேசி வருவதால் இந்த இரு கட்சிகளும் தொடர்ந்து மெளனமாக இருக்குமா அல்லது பாமகவுக்கு வாக்களிக்காதீர்கள் என்று கேட்டுக் கொள்ளுமா என்று தெரியவில்லை.