விக்கிரவாண்டி இடைத் தேர்தல்.. நாம் தமிழர் கட்சி சார்பில்.. டாக்டர் அபிநயா போட்டி

Su.tha Arivalagan
Jun 14, 2024,06:49 PM IST

சென்னை:   விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயா போட்டியிடுவார் என்று கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.


விக்கிரவாண்டி சட்டசபைத் தொகுதிக்கு ஜூலை 10ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. இந்தத் தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுவார் என ஏற்கனவே அக்கட்சி அறிவித்து விட்டது. இன்று கட்சியின் தேர்தல் பணிக் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து தேர்தல் பணிகளும் தொடங்கவுள்ளன.




இந்த நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சி தனது வேட்பாளரை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சீமான் விடுத்துள்ள அறிவிப்பில், வருகின்ற சூலை 10 அன்று, தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக என் அன்புத்தங்கை மருத்துவர் அபிநயா (இளங்கலை சித்த மருத்துவம் B.H.M.S., MD) அவர்கள் போட்டியிடவிருக்கிறார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்து நிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்கு முழு ஒத்துழைப்பை நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.


தொடர்ந்து ஒவ்வொரு தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிட்டு வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் 8.2 சதவீத வாக்குகளைப் பெற்று மாநிலக் கட்சி அந்தஸ்தையும் அது எட்டிப் பிடித்து சாதனை படைத்துள்ளது. அந்த அந்தஸ்து கிடைத்த பின்னர் நாம் தமிழர் கட்சி சந்திக்கப் போகும் முதல் தேர்தல் விக்கிரவாண்டி இடைத் தேர்தல்தான். இந்தத் தேர்தலிலும் முத்திரை பதிக்க அக்கட்சியினர் ஆர்வமாக உள்ளனர்.


மறுபக்கம் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி சார்பில் பாமக ஆகியவை போட்டியிடும் என்று தெரிகிறது. எனவே இந்தத் தேர்லிலும் நான்கு முனைப் போட்டி தவிர்க்க முடியாது என்றே தெரிகிறது.