விக்கிரவாண்டி.. வாக்குச் சாவடியில் விபரீதம்.. வாக்களிக்க வந்த பெண்ணை கத்தியால் குத்திய மாஜி கணவர்!
விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், வாக்குச்சாவடியில் வரிசையில் நின்றிருந்த பெண்ணிற்கு கத்திக்குத்து விழுந்தது. அந்தப் பெண்ணின் கணவர்தான் இந்த விபரீத செயலில் ஈடுபட்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
விக்கிரவாண்டியில் இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு நடைபெறும் பொழுது எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக கடந்த 2 நாட்களாக தேர்தல் ஆணையம் தீவிர பணியில் ஈடுபட்டிருந்தது.
இந்நிலையில், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட கொசப்பாளையம் வாக்குப்பதிவு மையத்தில், இன்று காலை கனிமொழி என்ற பெண் வரிசையில் காத்திருந்தார். அப்போது அங்க வந்த ஒரு நபர் கனிமொழியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் கத்தியை எடுத்து குத்தி விட்டார். தப்பி ஓட முயன்ற அந்த நபரை போலீசார் மடக்கிப்பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் கனிமொழியை போலீஸார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின்னர் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கனிமொழியை கத்தியால் குத்தியவர் அவருடைய முன்னாள் கணவர் ஏழுமலை என்று தெரியவந்தது. மேலும், ஏழுமலை ஏற்கனவே இரட்டை கொலை வழக்கில் சிறைக்கு சென்று வந்தவர் என்பதும் தெரியவந்தது.
இந்த கத்திக்குத்து சம்பவத்திற்கும் அரசியலுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றும், குடும்ப தகராறு காரணமாக தான் இந்த கத்திக்குத்து நடந்துள்ளதாகவும் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.