விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. கூட்டணி கட்சிகளுடன் பேசி முடிவு.. அன்புமணி ராமதாஸ்

Meenakshi
Jun 13, 2024,06:11 PM IST

விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் ஆலோசித்து  பாமக முடிவு எடுக்க உள்ளதாக அக்கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


ஜூலை 10ம் தேதி விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அன்றே தேர்தல் நடத்தை விதிகளும் நடைமுறைப்படுத்தப்பட்டன. ஜூன் 14ஆம் தேதி, அதாவது நாளை வேட்பு மனு தாக்கல் தொடங்கி, ஜூன் 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வேட்பு மனுக்கள்  ஜூன் 24ஆம் தேதி பரிசீலனை செய்யப்பட்டு, பின்னர் மனுக்களை வாபஸ் பெற ஜூன் 26 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். வாக்குப் பதிவு ஜூலை 10ம் தேதி நடைபெறும், வாக்குகள் ஜூலை 13ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.




விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் பாஜக கூட்டணியில் வேட்பாளர்களை தேர்வு செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், பாஜக கூட்டணியில் உள்ள பாமக போட்டியிடுவது தொடர்பாக ஆலோசித்து வருகிறது. இதுவரை இடைத்தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகி இருந்த பாமக இந்த முறை விக்கிரவாண்டி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக பல கட்ட ஆலோசனை நடத்தி வருகிறது.


விழுப்புரம்  மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் உள்ள பாமக நிறுவனர் இல்லத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், அவைத் தலைவர் ஜி கே மணி மற்றும் மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தொடர்பாக இன்றைய கூட்டத்தில் பேசினோம். எங்களுடைய முடிவை கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேசிய பிறகு தெரிவிக்கிறோம் என்றார்.