அதிமுக இல்லாட்டி திமுக.. தப்பாகிப் போன எடப்பாடி பழனிச்சாமி கணக்கு.. ஷாக் கொடுத்த தொண்டர்கள்!

Su.tha Arivalagan
Jul 13, 2024,05:10 PM IST

சென்னை: விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் அதிமுக போட்டியிடாமல் புறக்கணித்தது பெரும் தவறான முடிவாக மாறியிருக்கிறது. அதிமுமக வாக்குகள் முற்றிலும் திமுக பக்கம் போயிருப்பது அதிமுக மேலிடத்திற்கு அதிர்ச்சி அளித்திருக்கிறது. அதாவது மொத்தமாக அதிமுக வாக்குகளை திமுக அள்ளி விட்டது. இது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


அதிமுக போட்ட கணக்கு, பாமக போட்ட கணக்கு எல்லாமே தப்புக் கணக்காகி விட்டதையே இந்த தேர்தல் முடிவு தெரியப்படுத்தியுள்ளது.


விக்கிரவாண்டி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது அதிமுக தனது வேட்பாளரை அறிவிக்காமலேயே இருந்தது. கடைசி நேரத்தில் தாங்கள் தேர்தலைப் புறக்கணிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இது பலருக்கும் ஆச்சரியம் அளித்தது. மாறி மாறி தமிழ்நாட்டில் ஆட்சி புரிந்த கட்சி, பிரதான எதிர்க்கட்சி, கிராமங்கள் தோறும் நல்ல வலுவான ஆதரவைக் கொண்டுள்ள கட்சி இப்படி தேர்தலை புறக்கணிப்பது சரியல்ல என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.


அதிமுக, பாமக போட்ட கணக்கு:




அதேசமயம், அதிமுகவின் இந்த முடிவு மறைமுகமாக பாமகவுக்கு ஆதரவு அளிக்கும் நிலைப்பாடு, எதிர்காலத்தில் பாமகவை தங்களது கூட்டணிக்குக் கொண்டு வருவதற்காக அதிமுக இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் திமுக கூட்டணித் தலைவர்கள் கருத்துக்களை முன்வைத்து வந்தனர். ஆனால் அதை அதிமுக தலைவர்கள் நிராகரித்தனர். அதேசமயம், தேர்தல் பிரச்சாரத்தில் ஜெயலலிதா படத்தை வைத்து பாமக பிரச்சாரம் செய்தது. அதிமுகவினரும், தேமுதிகவினரும் பாமகவுக்கே வாக்களிக்க வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸும் கூட பகிரங்கமாகவே கோரிக்கை வைத்தார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் கூட அந்தக் கோரிக்கையை வைத்தார்.


இதையடுத்து அதிமுகவினர் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும். யாருக்கும் வாக்களிக்கக் கூடாது என்று எடப்பாடி பழனிச்சாமி கட்சியினருக்கு கோரிக்கை வைத்தார். ஆனால் வாக்குப் பதிவின்போதே  அதிமுகவினர், எடப்பாடியாரின் கோரிக்கையை நிராகரித்து விட்டதை உணர்த்தி விட்டனர். காரணம், கடந்த 2021 தேர்தலை விட அதிக அளவிலான வாக்குகள் இந்த முறை அங்கு பதிவாகியதால் அதிமுகவினரும் வாக்களித்திருப்பதை உறுதிப்படுத்தியது. ஆனால் அவர்கள் யாருக்கு வாக்களித்திருப்பார்கள் என்ற பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது.


அதிமுக இல்லாவிட்டால் திமுக:




இன்று அதற்கான விடை தெரிந்து விட்டது. திமுகவுக்கு கொண்டு போய் அதிமுகவினர் தங்களது வாக்குகளை அள்ளிக் குவித்து விட்டனர். கொஞ்சம் கூட பாமக பக்கமோ அல்லது நாம் தமிழர் கட்சிக்கோ அதிமுக வாக்குகள் போகவில்லை என்பது தெள்ளத் தெளிவாகி விட்டது. இது பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கையையும் அதிமுகவினர் நிராகரித்துள்ளனர். பாமகவையும் அவர்கள் ஏற்கவில்லை. மாறாக காலம் காலமாக யாரை எதிர்த்து வாக்களித்து வந்தார்களோ அந்த உதயசூரியனுக்கு வாக்களித்து புதிய அரசியல் ஸ்டேட்மென்ட்டை கொடுத்துள்ளனர் விக்கிரவாண்டி அதிமுகவினர்.


அதிமுக இல்லாவிட்டால் திமுக என்ற நிலைப்பாட்டை அதிமுகவினர் எடுத்திருப்பது அரசியல் களத்தில் புதிய செய்தியாக வந்து சேர்ந்துள்ளது. இது நிச்சயம் அதிமுகவுக்கு நல்ல செய்தி அல்ல.. அக்கட்சி சுதாரிக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் அதிமுக தலைமை அலட்சியம் காட்ட ஆரம்பித்தால் அதிமுகவினர் மெல்ல மெல்ல திமுக பக்கம் திரும்பத் தொடங்கி விடுவார்கள் என்பதையே இந்த தேர்தல் முடிவு கூறும் செய்தியாக நாம் பார்க்க வேண்டியுள்ளது.


பாமகவுக்கு அதிமுகவினரிடையே ஆதரவு இல்லை என்பதையும் இந்த தேர்தல் முடிவு காட்டியுள்ளது. மேலும் பாமக, பாஜக தலைவர்களின் அழைப்பையும் கூட அதிமுகவினர் முழுமையாக நிராகரித்துள்ளனர். அதிமுகவுக்கு மட்டுமே எங்களது ஆதரவு.. அதிமுக இல்லாத களத்தில் திமுகதான் எங்களது சாய்ஸ் என்று அதிமுகவினர் முடிவெடுத்திருப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.


எடப்பாடி பழனிச்சாமி என்ன செய்யப் போகிறார்?:




அதிமுகவினரின் இந்த அதிரடி முடிவு நிச்சயம் அதிமுக மேலிடம் எதிர்பாராத ஒன்று. அதிமுகவினரின் நம்பிக்கையை அதிமுகவே இழந்திருப்பது நிச்சயம் அக்கட்சிக்கு நல்லதல்ல. இந்தத் தேர்தலை புறக்கணித்திருக்கக் கூடாது. போட்டியிட்டிருக்க வேண்டும். தோல்வியோ வெற்றியோ அது அடுத்த கட்டம்.. போட்டியிட்டிருக்க வேண்டும்.. திமுகவுடன் முட்டி மோதியிருக்க வேண்டும். ஒரு கை பார்த்திருக்க வேண்டும். இதைச் செய்யத் தவறி விட்டார் எடப்பாடி பழனிச்சாமி என்றுதான் விக்கிரவாண்டி தொகுதி அதிமுகவினர் மறைமுகமாக உணர்த்தியுள்ளனர்.


எடப்பாடி பழனிச்சாமி விக்கிரவாண்டி தேர்தல் முடிவை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு மாநிலம் முழுவதும் அதிமுகவினரின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை இப்போதே செய்ய ஆரம்பிக்க வேண்டும். தொண்டர்கள் இல்லாமல் எந்த இயக்கமும் இல்லை. எனவே தலைமைப் பொறுப்பு பிரச்சினை, ஓபிஎஸ் விவகாரம் என எல்லாப் பிரச்சினைகளாலும் மனதளவில் சோர்ந்து போய் விட்ட அதிமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளில் எடப்பாடி பழனிச்சாமி இறங்கினால்தான் அதிமுகவின் நிலை வரும் காலத்தில் மேம்படும் என்று தெரிகிறது.


மக்களைப் பாதிக்காத கள்ளச்சாராயம்:




விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அதிமுக, பாஜக, பாமக ஆகியவை எதிர்பார்த்தன. ஆனால் எந்த வகையிலும் இந்தத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதையும் வாக்காளர்கள் உணர்த்தியுள்ளனர். மேலும் திமுக அரசின் திட்டங்கள் அடித்தட்டு அளவுக்குப் போயிருப்பதையும் இந்த தேர்தல் முடிவு காட்டுவதாக திமுக கூட்டணி தலைவர்கள் கூறுகிறார்கள்.


பல வகையிலும் விக்கிரவாண்டி இடைத் தேர்தல் முடிவு பல செய்திகளை எல்லாக் கட்சிகளுக்குமே கொடுத்துள்ளது. ஒவ்வொரு கட்சியும் இந்த மெசேஜை சாதகமான முறையில் எடுத்துக் கொண்டு தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.