Manjula Devi
Mar 24, 2025,06:42 PM IST
சென்னை: விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் 2026ம் ஆண்டு பொங்கலையொட்டி திரைக்கு வருகிறது. அதாவது ஜனவரி 9ம் தேதி முதலே விஜய் ரசிகர்களுக்கு பொங்கல் தொடங்கி விடுகிறது. காரணம் அன்றுதான் ஜனநாயகன் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் நடித்து வரும் 69வது படம்தான் ஜனநாயகன். மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் இப்படம் உருவாகிறது. காரணம், விஜய் நடிக்கும் கடைசிப் படமாக இது கருதப்படுகிறது. இந்தப் படத்தை முடித்து விட்டு முழு வீச்சில் அரசியலில் ஈடுபடவுள்ளார் விஜய். அவரது தமிழக வெற்றிக் கழகம் கட்சி வருகிற சட்டசபைத் தேர்தலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருவதால் ஜனநாயகன் படமும் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ளது.
ஜனநாயகன் படத்தை எச். வினோத் இயக்குகிறார். பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், பாபி தியோல், கெளதம் மேனன், பிரியாமணி, நரேன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தின் ரிலீஸ் தேதியை இன்று பட நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி ஜனவரி 9ம் தேதி படம் திரைக்கு வருகிறது. விஜய்க்கும், பொங்கலுக்கும் மிகப் பெரிய ராசி உண்டு, பொங்கல் சமயத்தில் வரும் விஜய் படங்கள் பிளாக்பஸ்டர் ஆகியுள்ளன. குறிப்பாக போக்கிரி படம். அந்த வகையில் ஜனநாயகன் படமும் மிகப் பெரிய ஹிட்டாகும் என்று இப்போதே ரசிகர்கள் வைப் செய்ய ஆரம்பித்து விட்டனர்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கிய நடிகர் விஜய் கட்சியை வலுப்படுத்துவதற்காக தீவிரமாக பணியாற்றி வருகிறார். இதற்காக ஒவ்வொரு செயல்களையும் பார்த்து பார்த்து செய்து வருகிறார். அதே சமயத்தில் விஜய்யா இது என கேட்கும் அளவிற்கு விஜயின் பேச்சு அனல் பறந்து வருகிறது. விஜய் என்ன சொன்னாலும் அரசியல் களத்தில் அதிர்வலைகள் ஏற்படுத்திக் கொண்டே வருகிறது. இது மட்டுமல்லாமல் விஜயின் அரசியல் வருகை தமிழகத்திற்கே பல்வேறு எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளது.
வருகின்ற மார்ச் 28ஆம் தேதி விஜய் தலைமையில் கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அதனை முடித்த பிறகு விஜயின் சுற்றுப்பயணம், தேர்தல் பூத் கமிட்டி மாநாடு என விஜயின் அரசியல் ஆட்டம் தொடங்க உள்ளது. அதாவது 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை நோக்கி பல்வேறு கட்சிகளும் போட்டி போட துவங்க உள்ளார் விஜய்.
இப்படி ஒரு பக்கம் இருக்க, 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி தீவிரமாக பணியாற்றி வரும் விஜய், மறுபக்கம் தமிழ் சினிமா வரலாற்றில் விஜய் நடிக்கும் இறுதி படமான ஜனநாயகன் படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை கே. வி.என் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தின் இறுதிக் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருவதாகவும், இப்படம் நிறைவடைய 25 நாட்களே இருப்பதாகவும் கூறப்படுகிறது. படத்தின் சூட்டிங் நிறைவடைவதற்கு முன்பாகவே, இப்படத்தை வாங்குவதற்கு பல்வேறு டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. பல கோடி கொடுத்து இப்படத்தை ஓடிடி நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயத்தில் 25 நாட்கள் கழித்து விஜய் முழு அரசியல்வாதியாக களம் காண இருப்பதால் அரசியல் வட்டாரம் மேலும் பரபரப்பாக காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசியலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், என பான் இந்திய திரைப்படமாக ரிலீஸ் செய்ய பட குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தில் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பல்வேறு தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்தது. எம்ஜிஆர் போன்று கையில் சாட்டையை சுழற்றிக் கொண்டு விஜய் இருக்கும் போஸ்டர் இணையதளத்தில் வைரலானது. இதனை தொடர்ந்து படத்தின் அப்டேட் குறித்து ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து வந்தனர். ஏனெனில் விஜயின் இறுதிப் படமான ஜனநாயகன் படத்தில் மட்டுமே விஜய்யை நடிகனாக காண முடியும் என படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.