பாஜகவிலிருந்து காங்கிரஸுக்குத் தாவுகிறாரா விஜயசாந்தி.. பரபரப்பான டிவீட்!

Su.tha Arivalagan
Nov 02, 2023,10:28 AM IST

ஹைதராபாத்: தெலங்கானா மக்களை பிஆர்எஸ் கட்சியின் கொடுமைகள், அடக்குமுறைகள், தவறான ஆட்சியிலிருந்து காங்கிரஸ்தான் போராடிக் காக்க வேண்டும் என்று பாஜகவைச் சேர்ந்த நடிகை விஜயசாந்தி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


விஜயசாந்தி ஆரம்பத்தில் தளி தெலங்கானா என்ற தனிக் கட்சியை நடத்தி வந்தவர். பின்னர் கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியில் (தற்போதைய பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சி) இணைந்து செயல்பட்டார். பிறகு எம்.பியானார். காங்கிரஸுக்குப் போனார், அதன் பின்னர் பாஜகவில் இணைந்து செயல்பட்டு வருகிறார்.


இந்த நிலையில் தெலங்கானா சட்டசபைத் தேர்தலில் முன்னாள் எம்.பியான அசாருதீன் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். ஜூபிளி ஹில்ஸ் தொகுதியில் அவர் போட்டியிடப் போகிறார். அதே போல தானும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்பி பாஜகவில் சீட் கேட்டிருந்தார் விஜயசாந்தி. ஆனால் அவருக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது. இதுவரை வெளியான வேட்பாளர் பட்டியலில் அவரது பெயர் இடம் பெறவில்லை. இதனால் விஜயசாந்தி கடும் அப்செட் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.




இந்தப் பின்னணியில்தான் அவர் ஒரு பரபரப்பான டிவீட் போட்டுள்ளார். அதில் காங்கிரஸை உயர்த்திக் கூறியுள்ளதால் பாஜகவினர் கடுப்பாகியுள்ளனர். விஜயசாந்தியின் டிவீட் இதுதான்:


பிஆர்எஸ் கட்சியின் தவறுகளிலிருந்து தெலங்கானா மக்களைக் காக்க காங்கிரஸால்தான் முடியும். காங்கிரஸ்தான் காக்க மக்களுக்காக போராட வேண்டும்.  


சில பேர் சொல்வாங்க.. காங்கிரஸ் கட்சி 7 வருடமாக எதிர்க்கட்சியாக இருந்த சமயத்தில், அக்கட்சிக் கொடியை ஏந்தியது ராமுலம்மா தான் என்று. மறுபக்கம், பலர் பாஜகவுக்கு துணையாக நின்றார்கள். அந்தக் கட்சியால் சாதிக்க முடியும் என்று நம்பினார்கள். 1998ஆண்டு முதல் கடுமையாக உழைத்தார்கள். தென்னிந்தியா முழுவதும் உழைத்தார்கள். அக்கட்சியை பலப்படுத்தினார்கள்.


எப்போதுமே இரண்டு ஆப்ஷன்கள் உண்டு.


ஆனால் எல்லாமே, இந்த கேசிஆர் நிர்வாகத்திடமிருந்து மக்களை மீட்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான்  செய்யப்படுகின்றன.


போலீஸ் லாக்கப், ரவுடி தர்பார், நாயுடம்மா என சினிமாவில் இரட்டை வேடங்கள் சாத்தியமாகலாம்.  ஆனால் அரசியலில் அதற்கு வாய்ப்பில்லை.


ஏதாவது ஒரு கட்சியில்தான் செயல்பட வேண்டும், பணியாற்ற முடியும்.


ஹரஹர மகாதேவா, ஜெய் ஸ்ரீராம், ஜெய் தெலங்கானா"


என்று கூறியுள்ளார் விஜயசாந்தி. அவர் என்ன சொல்ல வருகிறார் என்று தெரியவில்லை. ஆனால் காங்கிரஸுக்குப் போகப் போவதாக உறுதியாக நம்பப்படுகிறது. விரைவில் தனது முடிவை அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.