"சாப்டாச்சா.. முதல்ல சாப்பிடுங்க.. அப்புறம் பேசலாம்".. பசியாற்றி அழகு பார்த்த விஜயகாந்த்!

Su.tha Arivalagan
Dec 28, 2023,10:01 AM IST

சென்னை: விஜயகாந்த் குறித்து எல்லோரும் என்னென்னவோ சொல்லி நெகிழ்ந்தாலும் அழுதாலும்.. அவர்கள் சொல்லும் ஒரு பொதுவான விஷயம்.. "சாப்ட்டீங்களா என்றுதான் முதலில் கேட்பார் விஜயகாந்த்" என்பதுதான். அது உண்மை, யாரையும் பசியுடன் இருக்க விட மாட்டார் விஜயகாந்த். பசியாற வைத்து அழகு பார்த்த பெரிய மனிதர் விஜயகாந்த்.


ஆரம்பத்திலிருந்தே இந்த நல்ல பழக்கம் விஜயகாந்த்திடம் இருந்தது. சென்னைக்கு சினிமாவில் நடிக்க வந்த காலத்தில் ஆரம்பத்தில் சிரமப்பட்டவர் விஜயகாந்த். அப்போது சினிமா வாய்ப்புக்காக தன்னைப் போல வந்தவர்கள் பலரும் அதிகம் சிரமப்பட்டது "சரியான சாப்பாடு" கிடைக்காமல்தான் என்பதை பார்த்து வேதனையுற்றவர்.


தான் சாப்பிடும்போது தன்னுடன் இருப்பவர்களை முதலில் சாப்பிட வைத்து நிறைந்த மனசுடன் அவர் சாப்பிடுவாராம். அதேபோல தன்னைப் பார்க்க யார் வந்தாலும் அவர் கேட்கும் முதல் கேள்வியே, சாப்பிட்டியா.. சாப்பிடலையா.. இந்தா வா முதல்ல போய் சாப்பிட்டு வா என்று  வீட்டிலோ அல்லது ஹோட்டலிலோ சாப்பிட வைப்பாராம்.




அவரது ஆரம்ப கால அலுவலகத்திற்குப் போய் சாப்பிடாத மனிதர்களே கிடையாது என்று சொல்லலாம். குறிப்பாக சினிமாக்காரர்கள் பலருக்கும் அது தாய் வீடு போல. எங்கு சாப்பாடு கிடைக்காவிட்டாலும் கூட, கேப்டன் ஆபீஸுக்குப் போயிட்டா கண்டிப்பா சாப்பிட்டு விடலாம் என்ற நம்பிக்கையைக் கொடுத்தவர் விஜயகாந்த். அந்த அளவுக்கு அவர் சக மனிதர்களின் பசியாற்றி அழகு பார்த்தவர்.


சினிமாத்துறையில் அடிமட்ட நிலையில் இருப்பவர்கள் பலருக்கும் நிறைய உதவிகளைச் செய்துள்ளார் விஜயகாந்த். கணக்கே இல்லை.. அந்த அளவுக்கு அள்ளி அள்ளிக் கொடுத்தவர். உதவி என்று அவரிடம் போய் விட்டால், உதவி பெறாமல் யாரும் திரும்பியதே இல்லை. அந்த அளவுக்கு இல்லை என்று சொல்லாமல் அள்ளிக் கொடுத்தவர் விஜயகாந்த்.


இதற்கு லேட்டஸ்ட் உதாரணம் .. விஜயகாந்த் அத்தனை உடல் நலம் குன்றி இருந்த நிலையிலும் கூட, மறைந்த நடிகர் போண்டா மணி வீட்டுக்கு விஜயகாந்த் சார்பில் ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.. இதை விட வேறு என்ன உதாரணம் காட்டி விட முடியும்.. விஜயகாந்த்தின் மனித நேயத்திற்கு.


விஜயகாந்த்தின் மரணம்.. உண்மையில் ஏழைகளுக்கும், நலிவடைந்தவர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் மிகப் பெரிய இழப்பு என்பதில் சந்தேகமில்லை. உள்ளத்தில் எதையும் வைத்துக் கொள்ளாத, வெளிப்படையான ஒரு நல்ல மனிதரை விஜயகாந்த் தொண்டர்கள் மட்டுமல்ல.. தமிழகமும் இழந்துள்ளது.


சினிமாவில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும், அரசியலிலும் கூட ஹீரோவாக வாழ்ந்து காட்டியவர் விஜயகாந்த்.