Vijayakanth: வானத்தைப் போல மனம் படைத்த.. கொரோனா காலத்தில்.. விஜயகாந்த் செய்த பேருதவி!

Su.tha Arivalagan
Dec 28, 2023,06:55 PM IST

சென்னை: கொரோனா பேரிடர் நாட்டையே உலுக்கியபோது யாருமே செய்யாத மிகப் பெரிய உதவியைச் செய்தவர் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த். தனது கல்லூரியை அரசிடம் ஒப்படைத்து, கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்திக் கொள்ள அனுமதித்த பெருமனம் படைத்தவர்.


விஜயகாந்த் குறித்து பேசிக் கொண்டே போகலாம்.. சொல்லச் சொல்ல வந்து கொண்டே இருக்கும் அவர் செய்த நற்காரியங்கள், நல்ல செயல்கள். அவர் செய்த உதவிகள் ஏராளம், ஏராளம். கருப்பு எம்ஜிஆர் என்று அவரை அவரது நிறத்துக்காக மட்டும் யாரும் சொல்லவில்லை.. இனம், மொழி, பால் பேதம் பார்க்காமல் கொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர் விஜயகாந்த்.


வாடி பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினார் வள்ளலார். அதுபோலத்தான் விஜயகாந்த்தும், வாட்டம் நிறைந்த முகங்களைப் பார்த்துப் பார்த்து அவர்களை புன்னகைக்க வைத்தவர். அவர் செய்யாத உதவி என்று ஒன்று உண்டா என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் சொல்ல முடியும்.




சிறந்த மனித நேயம் மிக்க விஜயகாந்த் கடந்த கொரோனா பேரிடரின்போது ஒரு காரியத்தை செய்தார். அதுவரை யாரும் செய்ய முன்வராத மிகப் பெரிய செயல் அது. சென்னை அருகே மாமண்டூரில் உள்ள தனது ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை கொரோனா பேரிடர் பணிகளுக்காக பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று முழுமையாக திறந்து விட்டார்.


காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியையும், சென்னையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேமுதிக தலைமைக் கழகத்தையும் தமிழக அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியவர் விஜயகாந்த். அது மட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது கட்சியினர் மூலம் பல உதவிகளைச் செய்தவர். குறிப்பாக ஆட்டோ ஓட்டுநர்கள், தினக் கூலித் தொழிலாளர்களுக்கு தன்னால் ஆன உதவிகளைச் செய்தவர் விஜயகாந்த்.