தமிழில் மட்டுமே நடித்த ஒரே நடிகர்.. விஜயகாந்த்தின் மறக்க முடியாத படங்கள்.. மறக்கக் கூடாத "கேப்டன்"!

Manjula Devi
Dec 28, 2023,06:55 PM IST

சென்னை: "அந்த வானத்தைப் போல மனம் படைத்த மன்னவனே".. இந்தப் பாடல் வரிகளுக்கு ஏற்ப இல்லை இல்லை என்று வருவோருக்கு உதவி செய்யும் பெரிய மனம் படைத்தவர் கேப்டன் விஜயகாந்த். தன் நடை, உடை, பாவனை என தனக்கென்று கம்பீரமான ஸ்டைலுடன், தனது நடிப்பின் திறமையை வெளிப்படுத்தியவர் விஜயகாந்த்.


மொத்த தமிழ்நாடும் அழுது கொண்டுள்ளது. அந்த கம்பீரமான பேச்சை இனி கேட்க முடியாது.. அந்த அதிரடி அரசியலைப் பார்க்க முடியாது.. அந்த தில்லான விஜயகாந்த்தை இனி காணவே முடியாத என்பது மக்களை பெரும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.


விஜயகாந்த் நல்ல திரைப்படக் கலைஞர். மிகவும் அன்பானவர். நல்ல அரசியல் தலைவர். சமூக சேவகர். மக்களிடம் அன்பாகவும், பாசமாகவும் இருந்தவர். சிறந்த செயல் திறன் கொண்ட உயர்ந்த மனிதர். ஏழை எளியவர்களின் துயர் துடைக்கும் நேர்மையான மாமனிதர். தான் மிகப்பெரிய கலைஞர் என்ற கர்வம் இல்லாமல் அனைவரிடமும் எளிமையாக பேசும் தங்க மனசுக்காரர்.


எதையும் வெளிப்படையாக பேசும் உயர்ந்த கலைஞர். தனது நடிப்பின் திறமையால் பட்டி தொட்டியெங்கும் பல கோடி மக்களை சம்பாதித்தவர்.  மதுரை திருமங்கலத்தில் 1952 ஆம் ஆண்டு விஜயராஜ் அழகர் சுவாமியாக பிறந்தவர்‌. 1990 இல் பிரேமலதாவை மணந்தார். இவருக்கு இரு மகன்கள் உள்ளனர். 


தமிழ் திரையுலகத்திற்கு வந்த பிறகு விஜயராஜ் என்ற பெயரை விஜயகாந்த் என மாற்றிக் கொண்டார். தமிழ் திரையுலகில் ஒரு தயாரிப்பாளராக, இயக்குனராக, நடிகராக வெற்றி பெற்றவர். 35 ஆண்டு காலம் திரை வாழ்க்கையில் தனக்கென்ற இடத்தை தக்க வைத்து150 படங்களுக்கு மேல் நடித்தவர். 1999 ஆம் ஆண்டு நடிகர் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். நடிகர் சங்கத்தின் மூலமாக நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவி செய்த கொடை வள்ளல். நடிகர் சங்கத்தை கடனிலிருந்து மீட்டவர்.


கேப்டன் விஜயகாந்த் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் ஒரு சிறந்த தலைவனாகவும் செயல்பட்டவர். இவர் எதார்த்தமான மேடைப் பேச்சாளர். அலங்கார வார்த்தைகள் இன்றி இயல்பாகப் பேசி மக்களைக் கவர்ந்தவர். 2005 ஆம் ஆண்டு மதுரையில் தேமுதிக என்ற கட்சியை ஆரம்பித்து மிகப்பெரிய கட்சியாக வளர்த்தவர். 2011 முதல் 2026 வரை தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட்டவர். அவரது அயராத உழைப்பால் தேமுதிகவின் கட்சியை மூன்றாவது மிகப் பெரிய கட்சியாக உருவாக்கியவர். ஒரு நடிகராகவும், அரசியல் தலைவராகவும் தனக்கென்ற மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய மாபெரும் கலைஞர் கேப்டன் விஜயகாந்த்.


விஜயகாந்த்தின் பல படங்களை மறக்க முடியாது.. தமிழில் மட்டுமே கடைசி வரை நடித்த ஒரே நடிகர் விஜயகாந்த் மட்டுமே. தமிழில் மட்டுமே நடிப்பேன் என்ற உறுதியிலும் கடைசி வரை தெளிவாக இருந்தவர் விஜயகாந்த். அவர் நடிப்பில் உருவான சில முத்திரைப் படங்கள்.




செந்தூரப்பூவே:


ராம்கி, நிரோஷா நடிப்பில் உருவாகி, 1988 இல் வெளியான படம். 200 நாட்கள் கடந்து வெற்றிகரமாக தியேட்டர்களில் வலம் வந்தது. இப்படத்தில் விஜயகாந்த் வித்தியாசமான வேடத்தில், காதலர்களை இணைத்து வைப்பவராக நடித்திருப்பார். அதிரடி நாயகனாக வலம் வந்த விஜயகாந்த்தை வித்தியாசமான பாத்திரத்தில் ரசிகர்கள் பிரமாதமாக வரவேற்றனர்.


வைதேகி காத்திருந்தாள் :


இப்படம் 1984 வெளிவந்து மாபெரும் ஹிட் பெற்றது. அதுவரை ஆக்சன், சென்டிமென்ட், படங்களில் நடித்த விஜய்காந்த் ஒரு சிறந்த காதல் நாயகனாக களமிறங்கி எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். மென்மையான, அழகான விஜயகாந்த்தை இதில் பார்ப்பதே அத்தனை சந்தோஷமாக இருக்கும்.  விஜயகாந்த்தின் திரை வாழ்க்கையில் இந்தப் படத்திற்கு மிக முக்கியமான இடம் உண்டு.


சின்ன கவுண்டர்:




கேப்டன் விஜயகாந்த் இப்படத்தில் தனது கம்பீரமான நடிப்பில் ஒரு கிராமத்து தலைவனாக நடித்து அசத்தியிருப்பார். பாசம், கோபம், காதல், ஆக்சன் என அனைத்தும் நிறைந்த இந்த படத்தில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியவர் கேப்டன் விஜயகாந்த். இப்படம் விஜயகாந்த்துக்கு மிகப் பெரிய இமேஜை ஏற்படுத்திக் கொடுத்தது. அவரை ஒரு அரசியல்வாதியாகப் பார்க்கும் எண்ணத்தையும் இது பல மடங்கு உயர்த்தியது.


சத்ரியன்:


இப்படம் 1990 இல் வெளியாகி அமோக வரவேற்பு பெற்றது. இதில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக வலம் வந்து தனது நடிப்பின் திறமையை வெளிப்படுத்தி இருப்பார் விஜயகாந்த். ஒரு மோசமான அரசியல்வாதியுடன் மோதும் காவல்துறை அதிகாரியாக இதில் கலக்கியிருப்பார் விஜயகாந்த். வசனங்கள் மிகப் பிரபலமாகின.


ஊமை விழிகள்:


1986இல் வெளிவந்த இப்படம் விஜயகாந்த்தின் மிகப் பெரிய மனசுக்கு ஒரு சின்ன உதாரணம். முற்றிலும் புதுமுக டெக்னீஷியன்களுடன் உருவான படம் இது. அவர்களை ஊக்கப்படுத்தி இதில் அவர் நடித்திருந்தார். படம் மிகப் பெரிய ஹிட்டடித்தது. நிமிடத்திற்கு நிமிடம்  பரபரப்பு, ஆக்சன், திரில்லர், என காட்சிகள் நிறைந்த படம் மெகா ஹிட் ஆனது. புதுமுகங்களுக்கு எப்போதுமே விஜயகாந்த் ஆதரவு கொடுப்பார். அந்த வகையில் இந்தப் படமும் அவரை நம்பி உருவாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.


அம்மன் கோவில் கிழக்காலே:




இப்படம் 1986 இல் வெளிவந்த நகைச்சுவை கலந்த காமெடி திரைப்படம். இப்படத்தில் உள்ள பாடல்கள், அதில் இடம்பெற்ற காட்சிகள் என மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தில் நடிகர் விஜயகாந்த் சின்னமணி என்ற கேரக்டரில் இளம் வயது நாயகனாக  மிகவும் அருமையாக நடித்திருப்பார். இந்தப் படம் அந்தக் காலத்தில் மிகப் பெரிய ஹிட்டானது.


புலன் விசாரணை:


பிரபல கொலையாளியான ஆட்டோ சங்கரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் புலன் விசாரணை. இதில் ராஜ் என்ற கதாபாத்திரத்தில் நேர்மையான போலீஸ் வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார் விஜயகாந்த். அவரது அருமையான நடிப்பாற்றலுக்கு மிகப் பெரிய தீனியாக இது அமைந்தது.


கேப்டன் பிரபாகரன்:


விஜயகாந்திற்கு இப்படம் ஒரு மைல்கல் என்றே சொல்லலாம். அதிரடி நாயகனாக ஆக்சன் கதாபாத்திரத்தில் துணிச்சலான நடிப்பை வெளிப்படுத்தியவர். இப்படம் விஜயகாந்தின் நூறாவது திரைப்படமாகும். இப்படத்தில் இருந்து தான் "கேப்டன்" என்ற புனை பெயர் வர காரணமாக இருந்தது. மேலும் கேப்டன் என்ற பெயரை முதலில் சொல்ல ஆரம்பித்தவர் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி என்பதும் குறிப்பிடத்தக்கது.


ஆனஸ்ட் ராஜ்:


இப்படம் விஜயகாந்துக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்த படம். இப்படத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக கனக்கச்சிதமாக பொருந்தி தனது நடிப்பின் ஆற்றலை வெளிப்படுத்தி இருப்பார் நடிகர் விஜயகாந்த். இந்தப் படமும் விஜயகாந்த்தின் முக்கியப் படங்களில் ஒன்றாக அமைந்தது.


வானத்தைபோல:


2000ஆம் ஆண்டு வெளியான இப்படம் குடும்ப பின்னணியை மையமாகக் கொண்ட திரைப்படம். அதிலும் நான்கு அண்ணன் தம்பிகளில் மூத்த அண்ணன் கேரக்டரில் எமோஷனல் ஆன காட்சிகளை தம் கண் முன்னே பிரதிபலித்திருப்பார் விஜயகாந்த். மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் 250 நாட்கள் கடந்து தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடியது வானத்தைப்போல திரைப்படம். விஜயகாந்துக்கு குடும்ப ஆடியன்ஸை அதிகம் கொண்டு வந்த படங்களில் இதுவும் ஒன்று.


ரமணா:




விஜயகாந்த்தின் வாழ்க்கையில் மிகப் பெரிய, மிக முக்கியமான படம் என்றால் அது இதுதான். ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளியானது ரமணா .மருத்துவத்துறை ஊழல் குறித்து மக்களிடம் மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்திய படம். கடந்த படங்களில் நடித்த கதாபாத்திரங்களை விட இப்படத்தில் கல்லூரி பேராசிரியராக வந்து லஞ்சம், ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பவராக வந்திருப்பார் விஜயகாந்த். இப்படத்தின் பிளாஷ்பேக் மற்றும் இறுதிக் கட்ட காட்சிகளில் விஜயகாந்த் நடிப்பு நெஞ்சை நெகிழ வைக்கும். கடைசிக் காட்சியில் அழ வைத்திருப்பார்.


இன்று நிஜமாகவே அனைவரையும் கண்ணீர்க் கடலில் ஆழ்த்தி விட்டு போய் விட்டார் விஜயகாந்த். கேப்டன் விஜயகாந்த் ஒரு சிறந்த நடிகராக மட்டுமில்லாமல் மக்கள் போற்றும் எளிமையான மனிதர். பிறருக்கு உதவும் பேருள்ளம் கொண்ட மனிதராக இருப்பதால் அவர்  மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்தவர். எத்தனை வருடங்கள் கடந்தாலும் இவருடைய எளிமையும் ..பிறருக்கு உதவும் குணமும்.. இவருடைய நடிப்பும் என்றும் நிலைத்திருக்கும்..